
“எனக்கு வயசாகிட்டே போகுதுனு கவலைப்பட்டிங்கல்ல… மகிழ் அங்கிள் கிட்ட பேசிடுங்க” என்று மொட்டை கட்டையாகச் சொன்னவனை தனலெட்சுமி குழப்பமாகப் பார்த்தார்.
அன்னையின் குழப்பத்தைப் புரிந்துகொண்டவனாக “ரெண்டு குடும்பமும் பிள்ளைங்க இழுக்குற திசையில ஓடுறிங்க… நாங்க ஒரே திசைல ஓடுனா உங்களோட ஓட்டத்துக்கு ஒரு முடிவு வரும்னு யோசிச்சேன்” என்றான்.
அதன் பின்னர் மெதுவாகத் தெளிந்த தனலெட்சுமியின் முகம் தடுமாற்றம், பூரிப்புக்குத் தாவி இறுதியாக மீண்டும் குழப்பத்தில் வந்து நின்றது.
“என்னாச்சுமா?”
“அனு… அவ இதுக்குச் சம்மதிப்பாளா?”
முந்தைய இரவில் தனது பூடகமானப் பேச்சில் திகைத்து கண்ணிமைக்க மறந்து மலங்க மலங்க விழித்த அனுக்ரஹாவின் நினைவில் முறுவலித்தான் ராகவர்தன்.
“அவ வேண்டாம்னு சொல்லுறதுக்கு எந்தக் காரணமும் இல்லயே”
“நீ அனுவை விரும்புறியா ராகவ்?”
அன்னையின் குரலில் கவலை தெரிந்தது.
ராகவர்தனின் தலை இல்லையென மறுப்பாக அசைந்தது.
“நான் பாத்து வளர்ந்த அனுவுக்கும் நேத்து நைட் நான் பாத்த அனுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குறதா தோணுச்சு… அந்த வித்தியாசம் எல்லாம் அவளுக்குள்ள வந்திருக்குற ஆரோக்கியமான மாற்றத்துக்கான அடையாளமா நான் பாக்குறேன்… அவ என் லைஃப் பார்ட்னரா வந்தா லைஃப் ரொம்ப சிரமமில்லாம போகும்னு நினைக்குறேன்… அங்கிள் கிட்ட பேசுங்க”