அங்கே நின்று கொண்டிருந்தான் சாந்தனு.
பின்னிருபதுகளில் ஒன்றை வயதாகக் கொண்ட இளைஞன்.
செய்யும் வேலைக்கேற்ற முதிர்ச்சி அவனது உடல்மொழியில் தெரிந்தாலும் இப்போது என்னவோ அலட்சியம் மட்டுமே சம்விருதாவின் கண்ணுக்குத் தெரிந்தது.
அடர்ந்த கேசமும், ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையும் அவனது தோற்றத்தை இன்னும் அழகாய் காட்டியது.
பயணக்களைப்பு முகத்தில் அப்பியிருந்தாலும் அவனது இயல்பான துருதுரு குணம் ஆங்காங்கே நானும் இருக்கிறேன் என அட்டெண்டன்ஸ் போட்டது. என்ன தான் மூக்குக்கண்ணாடி அவனை முதிர்ச்சியாய் காட்ட முயன்றாலும் அம்முயற்சி தோல்வியைத் தான் தழுவியது.
சம்விருதாவைப் பார்த்ததும் அந்த முகத்தில் கூடுதலாய் இன்னொரு விருந்தாளியும் வந்தமர்ந்தார். அது தான் இறுக்கம்.
“கதவைத் திறந்துட்டு வழிய மறிச்சு நின்னா என்ன அர்த்தம்? நான் இங்க உன் கூட தங்குறது உனக்குப் பிடிக்கலைனா பெரியவங்க கிட்ட சொல்லு… அதை விட்டுட்டு வழிப்பறிக்கொள்ளைக்காரன் மாதிரி குறுக்க நிக்காத”
இதை விட கடுமையாய் என்னால் பேச முடியாது என்ற ரீதியில் வந்து விழுந்தன வார்த்தைகள். அவை சம்விருதாவைக் கோபம் கொள்ள செய்தன.
“வந்ததும் ஆரம்பிச்சிட்டியா? உன் முகத்தைப் பார்க்காம இங்க நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்”
அவனை விட கடுமையாய் மொழிந்தபடி வழி விட்டாள் சம்விருதா.
சாந்தனு “உனக்கு ரொம்ப அன்கம்பர்டபிளா இருந்துச்சுனா தாத்தா கிட்ட போய் சொல்லேன்” என்றபடி தனது உடைமைகளை வைத்திருந்த பேக்கிலிருந்து டவலை எடுத்தான்.
சம்விருதா அமைதியாக இருக்கவும் “சொல்ல முடியாதுல்ல? உனக்கு கிடைச்ச இளிச்சவாயன் நான் தான்… என் தலையில மிளகாய் அரைக்குறதுக்குத் தானே உனக்குப் பிடிக்கும்… அதர்வா மேரேஜ் முடியுற வரைக்கும் நீயும் நானும் ஒரே ரூம்ல தான் இருந்தாகணும் மிசஸ் சாந்தனு… நமக்குள்ள என்ன பிரச்சனை வேணும்னாலும் இருக்கலாம்… ஆனா நீயும் நானும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் தான்… அதை நீயோ நானோ மாத்த முடியாது”
எள்ளல் தொனியில் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் பதுங்கினான் அவன்.
ஆனால் அவன் கூறிய ‘மிசஸ் சாந்தனு’ என்ற சொல் சம்விருதாவுக்குள் பூகம்பத்தை உண்டாக்கியது.