மாநகராட்சி குப்பைத்தொட்டியின் அருகே ஓடும் சாக்கடையின் ஓரத்தில் நாய்களுக்கு மத்தியில் விழுந்து கிடந்தான் அகிலன்.
பார்க்கும் போதே அருவருப்பும் ஆத்திரமும் ஒருங்கே எழுந்தது.
எவ்வளவு ஆத்திரம் என்றால் அருகில் கிடந்த கல்லை தூக்கி அவன் மண்டையை உடைக்கும் அளவுக்கு ஆத்திரம்!
பல்லைக் கடித்தவள் புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவனை நெருங்கினாள்.
“அகிலு! ஏய் அகிலு… எழுந்திரிடா”
அவனைப் புரட்டி எழுப்பியவள் “ஆ… நந்தி… நந்தி” என்று அவன் உளறவும்
“ஆமாடா! நந்தி தொந்தி பந்தி” என்று கடுப்போடு சொன்னபடி அவனது கரத்தைப் பற்றி தனது தோளில் போட்டுக்கொண்டு எழுப்பிவிட்டாள்.
போதையில் அவனது உடல் அங்குமிங்கும் தள்ளாட அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி நடந்தாள்.
ஆங்காங்கே நிற்கும் ஆட்டோக்காரர்கள், கடைகளில் நிற்கும் மக்கள் என அனைவரும் இக்காட்சியை வேடிக்கை பார்க்க ஆனந்திக்கு அவமானத்தில் உடல் குன்றிப்போனது.
ஆத்திரத்தை அடக்கியபடி அவனை வீட்டின் கிரில் கேட்டைத் திறந்து ஹாலில் கொண்டு வந்து போட்டவள் பெருங்கோபத்தின் வெளிப்பாடாக வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
கண்ணீர் நின்றது. ஆனால் கோபம் அடங்கவில்லை. மறுக்க மறுக்க மணமுடித்து வைத்தவர்களின் மீது எழுந்த கோபம், திருமணத்தை மறுத்துவிடு என கூறியும் சம்மதித்த அகிலனின் மீது எழுந்த கோபம், இதோ இப்போது அவளை ஏளனம் செய்துவிட்டு சென்ற அண்ணியின் வார்த்தைகள் உண்டாக்கிய கோபம் என அனைத்தும் கலந்து பெருவெடிப்பாக எழுந்த சினம் அவளைத் தாறுமாறாக யோசிக்க வைத்தது.
வீட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து நடுவீட்டில் படுத்திருந்தவனின் மீது ஊற்ற அவனோ போதையில் உளறினானே தவிர எழுந்திரிக்கவில்லை.