“டாட்டா! பாத்து பத்திரமா போங்க தாத்தா… பை பாட்டி” என்று கையசைத்துவிட்டு மழையில் நனைந்தபடி கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
அப்போது வழி மறித்தாற் போல வந்து நின்றது ஒரு ரெனால்ட் க்விட். முகத்தில் வழிந்த மழைநீரை வழித்துச் சுண்டிவிட்டவள்
“சரியான முட்டாபய டிரைவர்… கொஞ்சம் விட்டா இந்தச் சின்னவயசுலயே எனக்குப் பரலோகப்பிராப்தி வாங்கித் தந்திருப்பான் இடியட்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி காரைத் தாண்டிச் செல்ல ஒரு அடி எடுத்து வைக்க அவளைத் தடுப்பது போல காரின் முன்பக்க கதவு திறந்தது.
மதுரவாணி எரிச்சலுடன் நிமிர்ந்தவள் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனைக் கண்டதும் இயல்பானாள்.
“இப்போ எதுக்கு வழிப்பறிக்கொள்ளைக்காரன் மாதிரி பிஹேவ் பண்ணுற? மழை எப்பிடி கொட்டுது பாத்தேல்ல… நான் வீட்டுக்குப் போகணும்”
“அதுக்குத் தான் காரை நிறுத்துனேன்… வந்து உக்காரு… நான் வீட்டுல டிராப் பண்ணுறேன்” என்று சொன்னபடி காரில் அமர்ந்திருந்தவன் மதுசூதனன் தான்.
மதுரவாணி ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டவள் ஈர உடையுடன் அவனுடன் செல்ல மனமற்றவளாய்
“இல்ல! எனக்கு மழைல நனையுறது ரொம்ப பிடிக்கும்… நான் நனைஞ்சிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்” என்று சொல்லிச் சமாளித்தாள்.
“இஸிட்? உனக்கு மழைல நனைய ரொம்ப பிடிக்கிற மாதிரியே சில பேருக்கு இப்பிடி நனைஞ்சிட்டுப் போற பொண்ணை வெறிக்கிறது ரொம்ப பிடிக்குமாம்… அப்பிடிப்பட்டவங்க கண்ணு முன்னாடி என்னையும் பாரு என் அழகையும் பாருனு நனைஞ்சிட்டுப் போகப் போறியா? இல்ல என் கூட சேஃபா கார்ல வர்றியா?” என்று கேட்டவனிடம் உன்னை அப்படி எண்ணித் தான் நான் வர மறுத்தேன் என அவளால் சொல்லவா முடியும்!
வேறு வழியின்றி காருக்குள் அமர்ந்தவள் கதவை இழுத்துச் சாத்திக்கொள்ள கார் கிளம்பியது.
தன்னுடன் தனியே வர சங்கடமாய் உணர்வதைப் புரிந்துகொண்ட மதுசூதனன் காரை ஓட்டியபடியே அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“எதுக்கு கர்ணனோட லேடி வெர்சனா மாறி உன் குடைய அந்த ஓல்ட் கபிள்கு குடுக்கணும்? ஏன் இப்பிடி நனையணும்?”
“நான் அவங்களுக்குக் குடை குடுத்தது உனக்கு எப்பிடி தெரியும்?”
“நீ டீ குடிக்க ஆவலா ஓடி வந்தப்போ நான் ஆப்போசிட் ரெஸ்ட்ராண்டுக்குப் போயிட்டிருந்தேன்… அங்க இருந்து பாத்தா வெளியே நடக்கிறது எல்லாம் கண்ணாடி வழியே தெளிவா தெரியுமே! அதை விடு! நீ ஏன் குடைய குடுத்த?”
“அவங்க வயசானவங்கப்பா… அதுவுமில்லாம இப்பிடி தினசரி உழைச்சு அதுல வர்ற வருமானத்துல வாழுறவங்களுக்குக் கடவுள் குடுத்த பெரிய செல்வமே அவங்களோட ஹெல்த் தான்… இப்பிடி கொட்டுற மழைல நனைஞ்சா கண்டிப்பா அவங்க உடம்புக்கு முடியாம போயிடும்… அப்புறம் செலவுக்கு என்ன பண்ணுவாங்க? பாவம்ல”
கண்ணைச் சுருக்கி இரக்கத்தை அவள் காட்டிய விதம் மதுசூதனனுக்குப் பிடித்திருந்தது. அவளது பேச்சுக்குத் தலையாட்டியபடி சாலையில் கண் பதித்தான்.
மதுரவாணி அவனை ஒரு கணம் கூர்ந்து நோக்கியவள் பின்னர் சந்தேகமாய் “உனக்கு ரீசண்டா தானே பிரேக்கப் ஆச்சு? ஆனா உன்னைப் பாத்தா அப்பிடி தெரியலயே?” என்று வினவ அவன் நக்கலாய் அவளை நோக்கவும்
“அது இல்லப்பா! பொதுவா லவ் ஃபெயிலர் ஆனவங்க ஒன்னு வாழ்வே மாயம் கமலஹாசன் மாதிரி ஆயிடுவாங்க… இல்லனா தேவதாஸ் மூவி ஷாரூக்கான் மாதிரி ஆயிடுவாங்க… அதுவும் இல்லனா அர்ஜூன் ரெட்டி வி… நோ நோ! எனக்கு அவனைப் பிடிக்காது! வேற யாரு?…” என்று யோசித்தவள் நினைவு வந்தவளாய்
“ஆங்! வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி ஆயிடுவாங்க… ஆனா நீ அப்பிடிலாம் ஆகலயே! இப்போவும் பழையபடி ஸ்மார்ட்டா ஹாண்ட்சம்மா தான் இருக்க… அதான் கேட்டேன்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
மதுசூதனன் அதற்குச் சத்தமாய் நகைத்தவன் “நிறைய சினிமா பாத்து கெட்டுப் போயிருக்க… ஒரு தடவை பிரேக்கப் ஆயிட்டுனா அதுக்கு வாழ்க்கையே முடிஞ்சு போயிட்டுனு என்னை நானே ஏன் ஸ்பாயில் பண்ணிக்கணும்?”
“அதுவும் சரி தான்! ஒருவேளை நீ பூவே உனக்காக விஜய் மாதிரி ஒரு செடில ஒரு தடவை தான் பூ பூக்கும் கேட்டகரியா?” என்று கேட்க மதுசூதனன் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டான்.
“வாட் ரப்பிஷ்? செடியும் மனுசனும் ஒன்னா? லைப்ல லவ், பிரேக்கப் இதுலாம் பாஸிங் கிளவுட்ஸ் மாதிரி… அதுலயே தேங்கி நின்னுட்டோம்னா வாழ்க்கை நாசமா போயிடும்… பீ பிராக்டிக்கல்” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்
“ம்ம்… நீ ரொம்பத் தெளிவா தான் இருக்க… ஆனா நான் தான் நீ ஒரு தாடி வைக்காத தேவதாஸ் மாதிரி நான் அப்பிடி காதலிச்சேன், இப்பிடி காதலிச்சேனு உளறுவ… மீசையில்லாத பாரதி மாதிரி கவிஞன் அவதாரம் எடுத்து பாரதிக்கு ஒரு கண்ணாம்மானா எனக்கு என்னோட தனு பேபினு சொல்லுவனு என்னென்னமோ நினைச்சேன்… ப்ச்.. விடு… இதே மாதிரி தெளிவு காதல் முறிஞ்சு போன எல்லாருக்கும் இருந்தா லவ் ஃபெயிலர் ஆயிட்டுனு தற்கொலை பண்ணிக்கிறவங்க எண்ணிக்கையாச்சும் குறையும்”