
“உன் கோவம் இன்னும் தீரலனா இங்க இப்பவே உன் கால்ல விழுந்து கூட நான் மன்னிப்பு கேக்குறேன் கிருதி”
அவன் ஒன்றும் பொய்யுரைக்கவில்லை என்பது அவனிடமிருந்து வெளிவந்த உறுதியான குரலில் புலப்பட்டது.
பிரக்ருதி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவள்
“சொல்லிட்டு ஏன் வெய்ட் பண்ணுற? கம் ஆன்! கால்ல விழு” என்று தனது வலதுகாலை ஆட்டிக் காட்ட ஷ்ரவன் வாயடைத்துப் போனான்.
கேசவ் ஒரு வேகத்தில் காலில் விழுவேன் என்று தனஞ்செயனின் திருமணத்தில் கூறிய போது பிரக்ருதி அப்படி ஒரு நிலையை அவனுக்கு உருவாக்கமாட்டாள் என பரிந்து பேசியவன் இன்று பிரக்ருதியின் அதிரடியில் ஒரு நிமிடம் அதிர்ந்தான்.
கேசவ் நண்பனை அர்த்தத்தோடு பார்த்தான்.
“ஹலோ! என்ன கண்ணும் கண்ணும் நோகியா மோட் ஆன் பண்ணுறியா? கால்ல விழுவேன்னு சொன்ன… இன்னும் விழலையே”
பிரக்ருதி இப்போது இடதுகாலை ஆட்டிக் காட்ட கேசவ் சற்றும் யோசிக்காமல் நூற்றுக்கணக்கானோர் வந்து போய் கொண்டிருந்த அந்த மெட்ரோ ஸ்டேசனில் பிரக்ருதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
“ஐ அம் ரியலி சாரி கிருதி” என்று கரம் வேறு கூப்பினான் அவன்.
பிரக்ருதி சந்தோசமாகப் புன்னகைத்தவள் “ஆயுஷ்மான் பவ” என்று அவனை ஆசிர்வதித்தாள்.
“சாரி! நான் எப்பவும் யூ.பி.ஐ யூஸ் பண்ணுறதால கையில கேஷ் இல்ல… இருந்தா ஆசிர்வாதம் வாங்குனதுக்குக் குடுத்திருப்பேன்” என்று பணிவாக அவள் பேச அதை அவளது வழக்கமான குறும்புத்தனம் என எண்ணி புன்னகையோடு எழுந்தான் கேசவ்.
தனது ஆடையைத் தட்டிவிட்டபடியே “ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று பிரக்ருதியிடம் கேட்டான்.
அவளோ கேசவ் ஏதோ புரியாத பாஷை பேசுவதை போல மலங்க மலங்க விழித்தாள்.
“இப்ப நான் சந்தோசமாகுற அளவுக்கு நீ என்ன செஞ்சுட்ட கிரிஷ்?”
கேசவும் ஷ்ரவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.