“ஹாய்” என்று கையசைத்தவன் அவளிடம் புன்னகை பூக்க
“நீங்க இங்க என்ன பண்ணுறீங்க ஆபிசர் சார்?” என்று வினவினாள் பிரதியுஷா.
“நீ வர்ற வரைக்கும் வாக் பண்ணிட்டிருந்தேன்… இதோ இப்போ போய் பிரேக்பாஸ்ட் சாப்பிடப்போறேன்” என்று இலகுவாக கூறியவன் கண்களில் ஆர்வம் மின்ன அவளைப் பார்த்தான்.
“வாட்? இங்க நீங்க எப்பிடி பிரேக்பாஸ்ட் சாப்பிட முடியும்?”
“ஏன் நான் இங்க சாப்பிடக்கூடாது?”
“ஹலோ விளையாடாதீங்க சார்”
“நான் எங்க விளையாடுனேன்? உனக்கு ஆசையா இருந்தா சொல்லு… ஓடி பிடிச்சு விளையாட நான் ரெடி” என்று சொல்லி டிராக்சூட்டின் பாக்கெட்டில் கைவைத்தபடி கேட்டான் ஆதவன்.
பிரதியுஷா கடுப்புடன் “ஓடி பிடிச்சு தானே விளையாடணும்? இருங்க நீல் அங்கிளை கூப்பிடுறேன்” என்றபடி வீட்டை நோக்கி நடைபோட குறுக்கே வழி மறித்தான் ஆதவன்.
“லிசன்! என் பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க… அப்புறம் நான் மனுசியாவே இருக்கமாட்டேன்” என்று சூடாக பதிலளித்தாள் அவள்.
“ஆல்ரெடி நீ பாக்குறதுக்கு மனுசி மாதிரி இல்ல” என்றான் அவன் கிண்டலாக.
அவள் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பிக்கவும் கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி சரணாகதி போல காட்டி “இந்த ஒயிட் கலர் லாங்க் ஸ்கர்ட்ல பாக்குறதுக்கு ஏஞ்சல் மாதிரி இருக்கனு சொல்லவந்தேன்” என்றான் ஆதவன்.
அதைக் கேட்டதும் விழியகல நோக்கியவளுக்குள் அவனது ஆர்வப்பார்வை முதல் சலனத்தை விதைத்தது. அந்தப் பார்வை குறுகுறுப்பை உண்டாக்கியது அவளுக்குள்.
அதை தவிர்க்க கண்களை இறுக மூடிக்கொண்டவள் “இப்போ வழி விடலனா ஐ வில் கால் நீல் அங்கிள்” என்றாள்.
“நீ என்ன கூப்பிடுறது? நானே அவரைக் கூப்பிடுறேன்… நீல் அங்கிள்” என்று அவன் உரத்தக் குரலில் அழைக்க வீட்டிற்குள் இருந்த நீலகண்டன் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
வந்தவர் “என்னாச்சு தம்பி?” என்று வினவ ஆதவன் பதில் சொல்வதற்கு முன்னே பிரதியுஷா முந்தி கொண்டாள்.
“பாருங்க அங்கிள்… நேத்து இவரோட ஸ்டாண்ட்-அப் காமெடி புரோகிராம்ல தான் ஃபர்ஸ்ட் மீட் பண்ணுனேன்… அதுக்கு அப்புறம் நேத்து நைட் ஜஸ்ட் ஒரு வாக் போகலாமேனு வெளியே போனா இதே மனுசன் வந்து நின்னார்… கேட்டதுக்கு டாஸ்மேனியா போலீஸ் காப்னு பேட்சை காட்டுனார்… இப்போ இங்கயே வந்துட்டார்… வந்ததும் இல்லாம என் கிட்ட வம்பு பண்ணுறார் அங்கிள்”
மூச்சு வாங்க அவள் சொல்லி முடிக்க ஆதவனோ நமட்டுச்சிரிப்புடன் கைகளைக் கட்டிக்கொண்டு நீலகண்டனைப் பார்த்தான்.
நீலகண்டன் பதற்றம் நீங்கி புன்னகைத்தவர் “உஷாம்மா இவர் நம்ம ஆது தம்பி… கதிர்காமன் சாரோட மூத்தப்பையன்… இவர் போலீஸ் இல்ல… இவரோட ஃப்ரெண்ட் சாம் தான் டாஸ்மேனியா போலீஸ் காப்… தம்பி சும்மா உன் கிட்ட விளையாடிருக்கார்” என்று சொல்ல பிரதியுஷா அவர் சொன்னதை நம்பவியலாமல் விழித்தாள்.
தன்னெதிரே குறும்புப்பார்வையும் குறுஞ்சிரிப்புமாக நின்ற இவனா சில ஆண்டுகளுக்கு முன்னே தனது வினோதன் மாமாவையும் வசு அத்தையையும் வாய்க்கு வந்தபடி வசைபாடியவன்? இவனும் இவனுடன் பிறந்த மற்றொருவனும் தானே வசுந்தராவை ‘ஹோம் ரெக்கர்’ என்று பழித்து பேசியது!
நேற்றைய ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்வின் போது மனம் உற்சாகமுற்ற தருணத்தில் மௌனமாக அவனுக்குச் சொன்ன நன்றிகள் எல்லாம் கானல் நீராகப் போனது.
இவனும் கே.கே.வில்லாவாசிகளில் ஒருவன். இவனுக்கும் தன்னையும் அனுபமாவையும் பிடிக்கப்போவதில்லை. அதனால் இவனிடமிருந்து ஒதுங்கியிருப்பதே நலமென அவள் தனக்குள் முடிவெடுத்த தருணத்தில் அந்த பங்களாவின் வளாகத்திற்குள் நுழைந்து தரிப்பிடத்தில் நின்றது ஒரு கார்.
அதன் கதவைத் திறந்து இறங்கி வந்த ஆதித்யன் போனில் வின்சென்டிடம் வரும் வசந்தகாலத்தில் ஈடனைத் திறப்பது குறித்து பேசிக்கொண்டே வந்தான்.
“யெஸ்… இந்த வருசத்துல மேனுஃபேக்சர் பண்ணுன ஃப்ரெஷ் ஜாம், வினிகர், லிக்யூர் எல்லாமே சீக்கிரமா ஈடனோட கஃபேக்குப் போயாகணும்… ஷாப் ஒர்க்கர்சையும் வரச் சொல்லிடலாம் வின்சென்ட்… ஐசக்கோட ப்ளேசுக்கு நியூவா அப்பாயிண்ட் பண்ணுன எம்ப்ளாயி எப்பிடி ஒர்க் பண்ணுறார்?” என்று தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அவனுக்கே உரித்தான கணீர் குரலில் பேசியபடி வந்தவன் புல்வெளியில் நீலகண்டனும் ஆதவனும் அவனுக்கு முதுகு காட்டியபடி நிற்பதை பார்த்துவிட்டு கேள்வியில் புருவங்கள் சுருங்க வின்சென்டின் அழைப்பை துண்டித்தான்.