அங்கே தள்ளாடியபடி நின்ற கிருஷ்ணாவைக் கண்டதும் கண்ணில் குழப்பம் சூழ “நீ இங்கே என்ன பண்ணுற கிரிஷ்?” என்றபடி நின்றவளின் அருகே தள்ளாடி வந்து நின்றவனின் முகத்தில் தெரிந்த சோகம் துளசியின் நெஞ்சை வருத்தியது.
அவனுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடியே அவனது கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவள் அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு அவனுக்குத் தண்ணீர் எடுத்து வரத் திரும்புகையில் கிருஷ்ணா துளசியின் கரம் பற்றி இழுக்க, துளசி சமாளிக்க முடியாமல் அவன் மீதே விழுந்து வைத்தாள்.
தன் மீது விழுந்தவளை எழுப்ப விரும்பாமல் அணைத்துக் கொண்டவனின் மூளைக்குள் எதுவும் வேலை செய்யவில்லை. அவனது உதடுகள் மட்டும் “ஐ லவ் யூ துளசி” என்ற வார்த்தையை விடாது உச்சரித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் துளசியோ கிருஷ்ணாவின் இந்தத் தள்ளாட்டத்துக்கு என்ன காரணமாக இருக்கக்கூடுமென்று யோசித்தவள் ஒரு வேளை குடித்திருக்கிறானோ என்று எண்ணமிட, அவளது மூளை “லூசே! அவன் மேல துளி கூட ஆல்கஹால் ஸ்மெல் வரலை… உன் யோசனையில தீயை வைக்க” என்று அவளைச் சபித்தது.
பின்னே ஏன் இவன் இவ்வாறு தெளிவின்றி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே கிருஷ்ணாவின் அணைப்பு இறுக ஆரம்பிக்க மெதுவாக அவனிடமிருந்து விடுபட்டவள் அவனை சோபாவிலிருந்து எழுப்ப முயற்சித்தாள்.
அவன் எழவும் கீழே விழாமல் தாங்கியவள் தனது அறைக்குள் அவனை உறங்க வைத்துவிட்டு ஹாலுக்குச் செல்ல எழவும், கிருஷ்ணா அவளை அகலவிடாமல் மீண்டும் இழுத்து அணைத்துக் கொள்ள, துளசி மனதிற்குள் “அடேய் பொசுக்பொசுக்குனு கையைப் பிடிச்சா இழுக்கிற? நாளைக்குக் காலையில நீ எழுந்திரு மகனே! உனக்குப் பொங்கல், தீபாவளி ரெண்டுமே சேர்த்துக் கொண்டாடுறேன்” என்று கறுவிக்கொண்டபடி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.
அவள் எழ முயலும் போது அவனது உதடுகள் காதருகே உரசியபடி உச்சரித்த “ஐ லவ் யூ துளசி” என்ற வார்த்தை துளசிக்குள் சத்தமின்றி பூகம்பத்தை உண்டாக்க, இவ்வளவு நேரம் இருந்த சிறுபிள்ளைத்தனமான கோபம் அகன்றுவிட, தன் அருகே கண் மூடியபடி தன் பெயரை உச்சரிப்பவனை ஆழப் பார்த்தாள் துளசி.