நதிக்கரையில் கிடந்த பெரிய பாறையொன்றில் வெண்மை மிண்ட் நிற பைஜாமாவும் டீசர்ட்டும் அணிந்து கருமை வண்ண அருவியாய் பக்கவாட்டில் கூந்தல் வழிந்தோட அமர்ந்திருந்தாள் பெண் ஒருத்தி.
பக்கவாட்டு தோற்றத்தில் ஒப்பனையற்ற முகம் மின்னியது. சற்றே சிவந்திருந்த நாசியும், பாடும் போது மென்மையாய் வளைந்து நெளியும் செவ்விதழும், பாடல் வரிகளுக்கேற்ப பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளும் அந்தக் காலைப்பொழுதில் அவளைப் பேரழகியாக காட்டியது என்றால் மிகையில்லை.
ருத்ரதேவ் அவள் அழகில் வாய்ப்பேச்சிழந்து நிற்கையிலேயே பாடல் தொடர்ந்தது.
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா.
கல் நெஞ்சையும் கசிய வைக்கும் திறன் சங்கீதத்துக்கு உண்டு என்பார்கள். ஆனால் அப்பெண்ணின் பாடலோ ருத்ரதேவின் உயிரையே உருக்கிவிட்டது.
அத்தனை பரபரப்புக்கிடையே அவனை ஆசுவாசமுற செய்த இனிய குரலுக்குச் சொந்தக்காரி ஒரு புன்சிரிப்புடன் திரும்ப ருத்ரதேவின் கண்களில் ரசனையும் சுவாரசியமும் குடியேறியது.
இத்தனை மைல் தொலைவில் தமிழ்ப்பெண் ஒருத்தியைப் பார்த்த மகிழ்ச்சியோடு வாலிபத்துக்கே உரித்தான ரசனையும் சேர்ந்து கொள்ள அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனை உந்தி தள்ளியது.
தன்னை மறந்து பாடி முடித்தவள் அங்கே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு கணம் மிரண்டு விழித்தாள்.
அவனது நெடுநெடு உயரத்தை அடுத்து அவளது பார்வையில் சிக்கியது ருத்ரதேவின் ஹேசல்நட் வண்ண விழிகளே! ஏனோ பார்க்கும் போதே வயிற்றில் புளியைக் கரைத்தது அவளுக்கு.
யார் இவன்? எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறான்? இது வரை இவனை எங்கேயும் பார்த்தது இல்லையே!
அவள் யோசிக்கும் போதே ருத்ரதேவ் அவளை நோக்கி இன்னும் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நெருங்கினான் “ஹாய்” என்ற முகமனுடன். இது அவனது இயல்பில்லையே என்று மனசாட்சி கிண்டல் செய்ய அதை ஒதுக்கிவிட்டு அப்பெண்ணை நெருங்கினான் அவன்.
பதிலுக்கு அவள் பேசாமல் திகைக்கவும் “நானும் தமிழ் தான்… பை த வே, ஐ அம் ருத்ரதேவ்” என்று வெகு இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
அவளது மௌனமும் திகைப்பும் அவனுக்கு வேடிக்கையாக இருக்கவே “நீங்களும் தமிழ் தான்னு உங்க பாட்டை வச்சே கண்டுபிடிச்சிட்டேன்… டோண்ட் கெட் பேனிக்… நான் ஒன்னும் உங்களை கடிச்சு திங்குற மேன்-ஈட்டர் இல்ல… ரிலாக்ஸ்” என்று கிண்டலாக உரைக்கவும் அப்பெண் சிலிர்த்துக் கொண்டாள்.
“முஜே பதா நஹி ஆப் கோன் ஹை… கேன் யூ ப்ளீஸ் மூவ் அ லிட்டில் (நீங்க யாருனு எனக்குத் தெரியலை… தயவு பண்ணி கொஞ்சம் நகருறிங்களா?)”
இவ்வளவு நேரம் செந்தமிழ் தாண்டவமாடிய நாவில் திடுதிடுப்பென இந்தியும் ஆங்கிலமும் குடியேறி விட்டது.