இவனிடம் கேட்டால் கட்டாயம் வழி காட்டுவான். வேகமாக ஆனை நோக்கி முன்னேறியவள் “சீனியர்” என்று பவ்வியமாக அழைக்க ராகவ் திரும்பிப் பார்த்தான். கூட இருந்த மாணவர்கள் ஏற்கெனவே காலையில் அவனுடன் வகுப்பிற்கு வந்தவர்கள் தான்!
சேஷாவைப் பார்த்ததும் அவர்கள் தங்களுக்குள் கண்களால் பேசிக்கொள்ள ராகவ் கூடைப்பந்தை மார்போடு அணைத்துக்கொண்டு
“யாரோ இனிமே என் கூட பேசாதனு மானிங் சொன்னாங்க” என்றான் எங்கோ பார்த்தபடியே.
சேஷா வேறு வழியின்றி இளித்து வைத்தவள் “அது அறியாப்பிள்ளை தெரியாத்தனமா பேசுனது சீனியர்… மனசுல வச்சுக்காதீங்க” என்று கூற
“அடேங்கப்பா! யாரு அறியாப்பிள்ளை? நீயா? முதல்ல இந்தப் பணிவை நிறுத்து… ஆல்ரெடி எங்கப்பா சொல்ல சொல்ல கேக்காம நெய்யா சாப்பிட்டு எனக்குக் கொலஸ்ட்ரால் அதிகம்… உன்னோட பணிவு குடுக்குற ஷாக்ல ஹார்ட் அட்டாக் எதுவும் வந்துட்டுனா என் உயிருக்கு நீ தான் பொறுப்பு” என்றான் ராகவ்.
“சரி… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு… லைப்ரரி எங்க இருக்குனு சொல்லு ப்ளீஸ்”
“அதான பாத்தேன்? காரியம் ஆகணும்னா உங்களுக்குத் திருடன் கூட வழிகாட்டியா தெரிவான் போல” என்று ராகவ் அலட்டிக்கொள்ள
“ஐயா சாமி! உனக்கு லைப்ரரிக்கு வழி தெரிஞ்சா சொல்லு… இல்லனா கிளம்பு… தெரியாம உன்னை திருடன்னு சொன்னதுக்கு ஓவரா கலாய்க்காத” என்றாள் சேஷா சிடுசிடுப்புடன்.
ராகவ் நமட்டுப்புன்னகையுடன் நண்பர்களைச் செல்லுமாறு பணித்தவன் தானும் நூலகத்திற்கு அவளுடன் வருவதாகச் சொல்லி நடக்க ஆரம்பித்தான்.
பந்தைக் கையில் சுழற்றியபடியே வந்தவன் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என அழைத்துச் சென்றாலும் யோசனையில் ஆழ்ந்தபடியே இருக்க
“என்னமோ டோலக்பூர்ல இருக்குற கோட்டைய பிடிக்கப் போற மாதிரி ஏன் இவ்ளோ டீப் திங்கிங்?” என்றாள் சேஷா.
ராகவ் கவனம் கலைந்தவன் படுதீவிரக்குரலில் “இல்ல… உன்னோட நேம் ரொம்ப லெங்க்தா இருக்கு… அதான் ஷார்ட்டா ஒரு நிக்நேம் வைக்கலாமானு யோசிக்கேன்… ம்ம்ம்… உனக்கு என்ன நிக்நேம் வைக்கலாம்? உன் ஹைட்டுக்குப் பொருத்தமா வைக்கணும்னா…” என்று தாடையில் தட்டி வானத்தைப் பார்த்தான்.
பின்னர் உற்சாகக்குரலில் “ஹான் யுரேகா…. மினியன்” என்றான் கண்கள் பளபளக்க.
சேஷா முகத்தைச் சுளித்தவள் “போடா டேய்” என்று சொல்லிவிட்டு முன்னேற வேகமாக அவள் பின்னே ஓடினான் ராகவ்
“இந்த நேம் நல்லா இல்லல்ல… சரி விடு… நல்லதா வேற என்ன நேம் வைக்கலாம்? ம்ம்ம்… யெஸ், லெப்ரகான்”
“அஹான்… நான் எந்தத் தங்கத்தை தேடி ஓடுறேன்?” என்றபடி நடந்தாள் அவள்.
“அதுவும் சரி தான்… எல்ஃப்” என்று ஆர்வமாய் மொழிந்தவனின் தலையில் நறுக்கென்று குட்டலாமா என சேஷாவின் கரங்கள் பரபரத்தன. ஆனால் என்ன எக்கினாலும் அவன் தலை அவளுக்கு எட்டா உயரம் தான் அவளது மனசாட்சி குறிப்பு காட்ட அமைதியாய் நடக்க மட்டும் செய்தாள்.
ஆனால் ராகவின் வாய் சும்மா இருக்கவில்லை. அடுத்தடுத்து ஒவ்வொரு பெயராக சொல்லிக்கொண்டே வந்ததில் சேஷா மெய்யாகவே நெடுதூரம் நடந்து வந்ததை போல களைத்துவிட்டாள்.
“ஷப்பா…” அலுப்புடன் மொழிந்தவள் அவனை நிறுத்த மாட்டாயா தெய்வமே என்ற ரீதியில் பார்க்க ராகவின் கவலையோ வேறு!
“அப்ப என்ன தான் நிக்நேம் வைக்கிறது?” என்றவனை முறைத்தாள் அவள்.
அவளது முறைப்பை தூர தள்ளிவிட்டு யோசித்தவன் “ஃபைண்ட் அவுட்… ட்வார்ஃப்… இனிமே உன்னோட நேம் ட்வார்ஃப்” என்றான் பற்கள் மின்ன.
சேஷா தலையிலடித்துக் கொண்டவள் “லைப்ரரிக்கு வழி காட்டுனு உன்னைக் கூட்டிட்டு வந்ததுக்கு உன்னால என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்யுற… கேரி ஆன்” என்று நடக்க
“ரொம்ப அலுத்துக்காத ட்வார்ஃப்… வேணும்னா நீயும் நல்லதா ஒரு நிக்நேம் வை… நான் தப்பாவே நினைச்சுக்க மாட்டேன்… பிகாஸ் எங்கப்பா என்னை ப்ராட்-மைண்டட் பாயா வளர்த்திருக்கார்” என்றான் அவன் அமர்த்தலாக.
இந்தப் பேச்சுவாக்கில் நூலகமும் வந்துவிட்டது. சேஷா எதிர்பார்த்ததை விட பெரிய நூலகம் தான். அதனுள் அடியெடுத்து வைத்த போதே புத்தகப்பிரியையான அவள் இதயம் சிட்டுக்குருவியாய் சிறகடித்தது.
நூலகரிடம் விண்ணப்பத்தை நீட்டியவளிடம் “இந்த வீக்கெண்ட் இண்டர்வியூ இருக்கும்மா… அதை வச்சு தான் செலக்ட் பண்ணுவோம்” என்றார் அவர்.
சரியென தலையாட்டி விட்டு ராகவுடன் வெளியேறியவளின் மனம் இந்த வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க துவங்கியது. பொதுவாக விடுதியில் தங்கியிருக்கும் மாணவ மாணவிகள் தான் கல்லூரிக்குள் பகுதிநேர வேலை பார்ப்பதற்கு ஆர்வமாக வருவது வழக்கம்.
ராகவ் கூடைப்பந்தால் அவள் தோளில் இடித்தவன் “இந்த வேலை உனக்கு அவ்ளோ இம்ப்பார்ட்டெண்டா?” என்று வினவ
“ம்ம்… இதை வச்சு என்னோட ஸ்டடீஸ்கு ஆகுற எக்ஸ்பென்சஸை கவனிக்க முடியும்… வேலை கிடைச்சா நல்லா இருக்கும்” என்றவளின் குரலில் ஏக்கம் மறையாமல் பட்டவர்த்தனமாக ஒலித்தது.
ராகவிற்கோ ஆச்சரியம். இத்தனை பெரிய கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிகட்டணம் செலுத்திய பெற்றோர் இனி வரும் படிப்புச்செலவை ஏற்கமாட்டார்களா என்ன? அதை அவளிடம் நேரடியாகவே கேட்க
“லாஸ்ட் வீக் தான் எனக்கு எய்ட்டீன்த் பர்த்டே முடிஞ்சுது… இனிமே என்னோட படிப்புச்செலவுக்காக என் பேரண்ட்சை டிஸ்டர்ப் பண்ண எனக்கு இஷ்டமில்ல” என்றாள் அவள்.