“அவங்க என்ன சொல்லிருந்தாலும் நீங்க இந்தச் சம்பந்தத்துக்குச் சரினு சொல்லிருக்கக் கூடாதும்மா” என்றாள் பல்லவி ஆயிரமாவது முறையாக.
செண்பகாதேவி மகளை எப்படி ஒப்புக்கொள்ளவைப்பது என்பது புரியாதவராக வள்ளியம்மாவைப் பார்த்துவைத்தார். அதேநேரம் அந்த அறையில் இன்னும் இருவரும் இருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல! மணியும் அவரது மனையாள் சங்கரியும் தான்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இப்போது என்ன செய்வது என புரியாது விழித்தனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக இந்த விவாதம் தான் போய்க்கொண்டிருக்கிறது.
செண்பகாதேவியின் வாதங்கள் அனைத்தும் அவரது மகளின் புத்திசாலித்தனமான கேள்விகளின் முன்னே செல்லாக்காசாகிப் போயின. அத்தோடு வள்ளியம்மாவுக்கு அவரது மருமகளுக்கும் என்ன ஆச்சரியமென்றால் இத்தனை நாள் தாயார் என்ன சொன்னாலும் மறுக்காது கேட்டுக்கொள்ளும் பல்லவியா இன்று இப்படி வார்த்தைக்கு வார்த்தை வாதம் செய்வது என்பது தான்.
மகாதேவனின் குடும்பத்தினர் வந்த விசயத்தை முதலில் வள்ளியம்மா பகிர்ந்துகொண்டதே அவரது மகன் மற்றும் மருமகளிடம் தான். அவர்களுக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
ஆனால் மெஸ்சிலிருந்து திரும்பிய பல்லவியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாத செண்பகாதேவி மகளுக்குப் புத்தி கூறுமாறு அழைத்ததும் துணுக்குற்று உடனே அங்கே கிளம்பி வந்துவிட்டனர்.
அனைவரும் என்னென்னவோ சொல்லியும் பல்லவி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிக்கவே சங்கரி அவளிடம் நைச்சியமாகப் பேசத் தொடங்கினார்.
“சரிடி தங்கம்! உனக்கு எதுக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கலனு சொல்லு”
பல்லவி இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்ற ரீதியில் பார்த்தபடியே “எனக்கு அந்த அனுவ… ப்ச்… அனுமோகனைச் சுத்தமா பிடிக்காது… சின்னவயசுல அவன் என்னை எவ்ளோ இன்சல்ட் பண்ணிருக்கான் தெரியுமா?” என்றாள் ஆதங்கத்துடன்.
“அப்பிடியா? மாப்பிள்ளை என்ன சொல்லி இன்சல்ட் பண்ணுனார்?”
“அவன் ஒன்னும் மாப்பிள்ளை இல்ல அத்தை” என்று அவள் மறுப்பாகப் பேசவும் கண்களை மூடித்திறந்தவர் “சரிம்மா தங்கம்… மாப்பிள்ளை இல்ல… அனுமோகன் போதுமா? இப்போ சொல்லு… அப்பிடி என்ன சொல்லி உன்னை இன்சல்ட் பண்ணுனார்?” என்று தண்மையாக வினவினார்.
“அத்தை அவனோட நேம் அனுமோகன் தானே… அதை நான் சுருக்கி அனுனு சொன்னதுக்கு மூனாவது மனுசங்களுக்கு அவனோட நேமை சுருக்க உரிமை இல்லனு சொல்லிட்டான்… அதோட அவன் கூட விளையாட போனப்போ எனக்கு ஷட்டில்காக்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுனு பைரவி முன்னாடி என்னை இன்சல்ட் பண்ணிட்டான்… அதை பாத்து பைரவி சிரிச்சது இப்போவும் என் மனசுல பதிஞ்சிருக்கு”
அவள் சொல்லி முடிக்கவும் அங்கிருந்த நால்வரும் சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
செண்பகாதேவி மகளிடம் வந்தவர் “பேரை சுருக்கக்கூடாதுனு சொன்னது, உன்னை பைரவி முன்னாடி கிண்டல் பண்ணுனதெல்லாம் சின்னவயசுல நடந்தது பவிம்மா… இப்போ அதே மாப்…. அனு தான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறார்… சின்னப்பிள்ளை மாதிரி வீம்பு பிடிக்காம யோசிடா” என்றார் அடம்பிடிக்கும் குழந்தையைச் சமாதானம் செய்யும் குரலில்.
அவனை யார் ஒற்றைக்காலில் நிற்கச் சொன்னது? திமிர் பிடித்தவன். அன்று வந்தது, உரிமைப்பொருள் என்று வியாக்கியானம் பேசியது எல்லாம் இதற்கு தானா? விளையாடுவதற்கு கூட கிராமத்துப்பெண் என்பதால் சேர்த்துக்கொள்ள மறுத்தவனுக்குத் திருமணம் என்றால் மட்டும் கிராமத்துப்பெண் வேண்டுமா? இரட்டைநாக்கு மனிதன்!
இதையெல்லாம் வெளியே சொல்லி திட்டவேண்டுமென்று பல்லவிக்கு ஆசை தான். ஆனால் அவளது அன்னையின் கண்ணுக்கு இப்போது அனுமோகன் என்பவன் அவரது மகளுக்கு வாழ்வளித்த வள்ளலாக அல்லவா தோன்றுகிறான். எனவே சிரமப்பட்டு வார்த்தைகளைத் தணிக்கை செய்துவிட்டு உதிர்த்தாள்.
“இங்க பிரச்சனை பேரை சுருக்கிக் கூப்பிட்டது இல்லம்மா… அவனோட மேள் ஈகோ தான் பிரச்சனை… என் கிட்ட அந்த ஈகோவ அவன் காட்டமாட்டான்னு என்ன நிச்சயம்? அவனுக்கு என்னவோ திருநெல்வேலி சீமைக்கு ராஜானு நினைப்பு… என்னை அல்ப புழு மாதிரி பாக்குறவனுக்கு இப்போ மட்டும் நான் இலஞ்சிக்கு இளவரசியாட்டம் தெரியுறேனா?” என்றவளுக்கு இதே வார்த்தையை நேற்று அனுமோகன் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஆனால் இப்போதும் அவள் சிறுபிள்ளைத்தனமாக மறுப்பது போலவே மற்றவர்களுக்குத் தோன்றியது. பல்லவியோ அவர்களிடம் தனது மறுப்புக்கான காரணத்தைச் சரியாக படம்பிடித்துக் காட்ட தனக்குத் தெரியவில்லையோ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.
செண்பகாதேவி மகளின் கரங்களைப் பற்றியவர் குற்றாலநாதனின் புகைப்படத்தின் அருகில் அழைத்துச் சென்றார். பல்லவிக்கு எப்போதும் போல அதிலிருந்து தந்தை தன்னைப் பார்த்து கண்களால் சிரிப்பது போன்று தோன்றியது.
“உங்கப்பாவும் தேவாண்ணனும் எத்தனை தடவை உனக்கும் அனுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு பேசிருக்காங்க தெரியுமா? அதெல்லாம் இனிமே நடக்க வாய்ப்பில்லனு நம்ம நினைச்ச நேரத்துல அவங்களே நம்ம வீடு தேடி வந்து பொண்ணு கேட்டாங்க… எனக்கும் முதல்ல இதுல சம்மதம் இல்ல தான்… ஆனா வள்ளியம்மா தான் எடுத்துச் சொல்லி புரியவச்சாங்க பவிம்மா… இது உங்கப்பா ஆசைப்பட்ட விசயம்… அதோட தேவி அண்ணிக்கும் இதுல சம்மதம் தான்… அவங்க பையனுக்காக சம்மதிச்சாலும் அவங்களுக்கும் ஒரு காலத்துல உன்னை அவங்களோட மருமகளா ஆக்கிக்கணுங்கிற எண்ணம் இருந்தது எனக்கு நல்லாவே தெரியும்… அதனால தான் நான் தயக்கத்தை ஒதுக்கி வச்சிட்டு இந்தச் சம்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டேன்”
“ஆனா அந்த அனு…”
“உன்னைப் பிடிச்சிருக்குனு வீட்டுல உள்ளவங்க கிட்ட தீர்மானமா சொன்ன அனு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கம்… அவன் என்னைக்குமே உன்னை யார் கிட்டவும் விட்டுக்குடுக்கமாட்டான்… நீ சின்னவயசுல நடந்த சண்டைய மனசுல வச்சுக்கிட்டு இப்போ தயங்குறது எனக்கு வேடிக்கையா இருக்கும்மா… நான் தேவி அண்ணிய நினைச்சு தான் தயங்குனேனே தவிர எனக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்ல… கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் அனுவும் கோயம்புத்தூர்ல தான் செட்டில் ஆகப்போறிங்க”
“அம்மா தேவியத்தைய மறந்துட்டீங்களா?” என இடைமறித்தாள் பல்லவி.
“அனுவுக்கு அங்கேயே கம்பெனி ஆரம்பிக்குற எண்ணம் இருக்குனு தேவாண்ணன் சொன்னார்… அந்த இடைவெளி உன்னோட அருமைய அண்ணிக்குப் புரியவச்சிடும் தங்கம்… இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்… இல்லனா காலம் முழுக்க என்னை மாதிரியே உன்னையும் சமையல்காரியா அடுப்படில வேகவச்சிட்டேங்கிற குற்றவுணர்ச்சியே என்னைக் கொன்னுடும்மா” என்று சொன்னபடி அவளது கரத்தைப் பற்றி கண்ணீர் விட்ட அன்னையைப் பார்த்து பல்லவிக்கும் கண் கலங்கிவிட்டது.
“மா! நான் என்னைக்கும் இந்த வேலைய கஷ்டம்னு நினைச்சதில்லம்மா” என்றவளை நிமிர்ந்து நோக்கினார் செண்பகாதேவி.
“நீ நினைச்சதில்லம்மா… ஆனா எட்டுவருசமா ராத்திரி பகலா என் கூட சேர்ந்து உழைச்சு இந்தக் குடும்பத்தை தலை நிமிர வச்ச என் தங்கத்தை விரும்பி கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் கேக்குறப்போ அதை விட சந்தோசம் எனக்கு வேற என்ன இருக்கு? நீயே சொல்லு”
அவரின் கண்களில் மகள் இந்த கல்யாணத்துக்குச் சம்மதித்துவிட மாட்டாளா என்ற ஏக்கம் சுடர் விடுவதைப் பார்த்த பல்லவி தந்தையின் புகைப்படத்தையும் சில நிமிடங்கள் நோக்கினாள்.
பின்னர் நீண்ட யோசனையின் முடிவில் அவளுக்கே உரித்தான நிமிர்வுடன் “சரிம்மா! எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்… ஆனா உங்களையோ அப்பாவையோ யாராச்சும் குறை பேசுனாங்கனா அடுத்த நிமிசமே இந்தக் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்ல நான் தயங்கமாட்டேன்… அப்புறம் எனக்கு அந்த அனு கிட்ட சில விசயங்களைக் கேட்டு கிளாரிபை பண்ணிக்கணும்… தேவா மாமா கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க” என்று படபடவென ஒப்பித்தவள் தனது அறைக்குள் சென்று அடைபட்டுக்கொண்டாள்.
செண்பகாதேவிக்கு மகள் சம்மதித்த சந்தோசத்தில் மனம் நிறைந்து போனது. பள்ளியில் இருந்த வந்த பார்த்திபனும் பார்கவியும் தமக்கைக்குத் திருமணம் என்றதும் துள்ளி குதித்தவர்கள் மாப்பிள்ளை யாரென்று தெரிந்ததும் கப்சிப்பாகி விட்டனர்.
தனது அறையில் அடைபட்டிருந்த பல்லவியோ அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரான அமைதியைக் கண்டுகொண்டவளாக வெளியே வந்தாள்.
“மா! அந்த அண்ணனுக்குச் சின்னவயசுலயே எங்களைப் பிடிக்காதும்மா… அவங்களுக்கு ஏன் அக்காவ மேரேஜ் பண்ணிவைக்கணும்னு நினைக்கிறீங்க?”
பார்கவியின் குரல் அவளது செவியைத் தீண்டவும் தன்னைப் போல தான் தனது உடன்பிறப்புகளும் சிந்திக்கின்றனர் என்று நிம்மதியுற்றபடியே அவர்கள் அமர்ந்திருந்த வராண்டாவில் சென்று அவளும் அமர்ந்தாள்.
அவளைக் கண்டதும் பார்த்திபன் “அக்கா நீ அந்த அண்ணனை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிட்டனு அம்மா சொல்லுறாங்க… உண்மையாக்கா?” என்று கேட்க ஆமென்று தலையாட்டிவைத்தவள் அடுத்த கணம் அன்னையைப் பார்க்க, அவரோ
“அவளே சம்மதிச்சிட்டா… நீங்க ரெண்டு பேரும் எந்தக் குட்டிக்கலாட்டாவும் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும்” என்று அதட்டவே இரட்டையர்கள் வழக்கம் போல அமைதியாயினர்.
செண்பகாதேவிக்குப் பல்லவி சம்மதித்ததே போதுமென்ற நிம்மதி. உடனே மகாதேவனுக்குப் போனில் விவரத்தைச் சொன்னவர் அனுமோகனுடன் பல்லவி ஏதோ பேசவேண்டும் என்கிறாள் என்று கூற அவரும் அதற்கு சரியென்றார்.
இருவரும் செண்பகாதேவியின் இல்லத்திலேயே சந்தித்துக் கொள்ளட்டும் என்று தீர்மானித்தனர் பெரியவர்கள்.
அதன்படி அன்று மாலை தனது பெற்றோர் மற்றும் பாட்டியுடன் அங்கே வருகை தந்த அனுமோகனுக்கு வரவேற்பெல்லாம் பலம் தான். பல்லவியும் அவளது சகோதர சகோதரியும் மட்டும் அந்த விருந்தோம்பலில் ஒட்டாமல் ஒதுங்கி கொண்டனர்.
பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க அனுமோகனின் விழிகள் பல்லவி எங்கே என தேடியலைய வள்ளியம்மா அதைப் புரிந்துகொண்டவராக
“பவி பின்வாசல்ல தான் இருக்கா தம்பி… பார்த்தியும் பாருவும் படிச்சிட்டிருக்காங்க… அவங்களோட இருக்கா… நீங்க போய் பேசுங்க” என்று சொல்லிவிட்டார்.
இதற்கு தானே காத்திருந்தான் அவன். அனுமதி கிடைத்தத்தும் அந்த வீட்டின் புழக்கடையை அடைந்தான். அங்கே சில பெரிய விருட்சங்களும் மலர்களும் காய்கறிச்செடிகளுமாய் வளர்ந்து நின்ற தோட்டம் அவன் ரசனையைக் கடன் வாங்கிக் கொண்டது.
அவனது விழிகள் தனது தலைக்கு மேலே கிளை பரப்பி நின்ற பலாமரத்தை அண்ணாந்து நோக்கியது. மரத்தில் பெரிதாகாத பழங்கள் தொக்கி நிற்க அவற்றை நோக்கியபடியே பார்வையை அங்கே செழித்து வளர்ந்திருந்த மணத்தக்காளி செடிகள் நிறைந்த புதரிடம் திருப்பினான்.
மிளகு அளவில் தக்காளி போன்ற உருவமைப்பில் இருக்கும் அந்தச் செடியின் சிவப்பும், வயலட்டுமான பழங்கள் என்றால் அவனுக்குச் சிறுவயதிலிருந்தே கொள்ளைப்பிரியம்.
ஆவலுடன் அதனருகே சென்றவன் குனிந்து அவற்றை விரல்களால் கிள்ளிப் பறிக்க முயலவும் “அதை பறிக்காதீங்க… விதை விழறதுக்காக விட்டு வச்சிருக்கோம்” என்ற கட்டளையிடும் குரல் அவன் செவியில் விழவும் சரியாக இருந்தது.
அவனுக்குக் கட்டளைகளுக்குப் பணிந்து போகும் பழக்கம் சிறுவயதிலிருந்தே கிடையாது. ஆனால் இம்முறை கட்டளையிட்ட அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அவன் மனதாள்பவளாகப் போய்விட்டாளே!
குறுஞ்சிரிப்புடன் நிமிர்ந்தவனின் விழிகளையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைத்தாள் கருநீலநிற டாப்பும், கறுப்புநிற பட்டியாலாவும் அணிந்தபடி கூந்தலை கேட்ச் கிளிப்பில் அடக்கி நின்ற பல்லவி.
அவளைக் கண்டவனின் விழிகள் ஒப்பனையற்று அழகுடன் மிளிர்ந்த முகத்தில் நிலைத்தது.
இவள் மட்டும் எப்படி எளிமையிலும் அழகாய் இருந்து தொலைக்கிறாள்? சேலையில் பார்த்த போது தெரிந்த முதிர்ச்சி இப்போது இந்த இலகு உடையில் விடுமுறை எடுத்துச் சென்றிருந்ததாலோ என்னவோ அவள் சிறுபெண்ணாகவே தோற்றமளித்தாள்.
அவளையே விழியகலாது நோக்கியவன் பல்லவிக்குள் வழக்கம் போல அமைதியின்மையைத் தோற்றுவிக்க அதை மறைத்தபடியே அவனை நோக்கி முன்னேறிவந்தவள் “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு பின்னே திண்ணையில் அமர்ந்திருந்த தம்பியையும் தங்கையையும் பார்க்க அவளின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு இடத்தைக் காலி செய்தனர்.
அவர்கள் சென்றதும் “எல்லாரையும் பார்வைலயே கண்ட்ரோல் பண்ணுற போல?” என்று இலகுவாகப் பேச்சை ஆரம்பித்தான் அனுமோகன்.
அவள் அதற்கு ஆமென்று சொன்னால் அவள் என்னவோ சர்வாதிகாரி என்பது போல தெரியும்! இல்லையென்றாலோ அவளது தம்பி தங்கையரைக் கவனியாத பொறுப்பற்ற பெண்ணாகத் தோன்றிவிடும்! எது எப்படியோ இவன் தன்னைப் பேசவிடாது செய்வதில் வல்லவனாக இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் பேச்சை மாற்றினாள்.
“நான் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதை கேட்டுடுறேன்… வேற எதை பத்தியும் பேச எனக்கு இஷ்டமில்ல”
“இசிட்? நீ கேள்வி கேட்டு அதுக்கு நான் பதில் சொல்லுறதுக்கு இங்க என்ன கோன் பனேகா குரோர்பதியா நடக்கப் போகுது? கம் ஆன் பவி, நம்ம மேரேஜ் பண்ணிக்கப் போறோம்… நமக்கு பேசிக்க ஏகப்பட்ட விசயம் இருக்கும்… கேசுவலா நான் பேசுறதை கேட்டா உனக்கு எந்த நஷ்டமும் ஆகப்போறதில்ல”
அவனது பேச்சைக் கேட்டதும் பல்லவியின் இதழில் சிரிப்பு ஒன்று பிறப்பெடுக்கவே அனுமோகன் இப்போது ஏன் நகைக்கிறாள் என்ற கேள்வியுடன் அவளை ஏறிட்டான்.
“இந்தச் சின்ன விசயத்துல கூட என் கிட்ட ஏட்டிக்குப் போட்டியா பேசுறீங்க, உங்களுக்கும் எனக்கும் எதுலயும் ஒத்துப்போகாதுங்கிறதுக்கு இதை விட பெஸ்ட் எக்சாம்பிள் இருக்க முடியாது”
பதில் சொல்லிவிட்டு நேருக்கு நேராகப் பார்த்தபடி நின்றவளைக் கண்டு அவனது புருவங்கள் மெச்சுதலில் உயர்ந்தன.
“இன்ட்ரெஸ்டிங்! உன்னை பேசி ஜெயிக்க முடியாதுனு மணி சித்தப்பா சொன்னார்… அதை லைவா பாத்துட்டேன்… எனி ஹவ் இந்த உலகத்துல எல்லாரும் எல்லாரோடவும் ஒத்துப்போகணும்னு அவசியமில்லயே”
“ஆனா ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப்புக்குள்ள சில விசயங்கள் ஒத்துப்போய் தான் ஆகணும் அனு”
பேச்சு வேகத்தில் அவனது பெயர்ச்சுருக்கம் அவள் வாயில் வந்துவிட அதை உணர்ந்து முழுப்பெயரைச் சொல்வதற்குள் அனுமோகனின் விழிகள் குறும்பில் பளிச்சிட்டுவிடவே அந்த முயற்சியைக் கைவிட்டாள் பல்லவி.
அதே குறும்புடன் அவளருகே வந்தவன் “அப்பிடி எல்லா விசயமும் ஒத்துப்போச்சுனா வாழ்க்கைல சுவாரசியமே இருக்காது பவி… நான் சொல்லுற எல்லாத்துக்கும் நீ ஆமா சாமி போட்டா எனக்கே சலிப்பு தட்டிடும்… சோ நம்ம இயல்பு என்னவோ அதுல இருந்து மாறாம இருக்கிறது தான் நமக்கு நல்லது” என்றான்.
“எல்லாம் சரி தான்… ஆனா உங்களுக்கு என்னைச் சின்னவயசுல இருந்தே பிடிக்காது… வில்லேஜ் கேர்ள் கூட விளையாட கூட கௌரவம் பாக்குற மனுசனுக்கு எப்பிடி கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சு?” என்று மனதிலிருப்பதை வெளிப்படையாக கேட்டுவிட்டாள் பல்லவி.
“குட் கொஸ்டீன்… பட் நின்னு பேசுறதுக்குப் பதிலா அங்க உக்காந்து பேசலாமே” என அவன் திண்ணையைக் காட்டிவிட்டு நடக்க அவளும் தொடர்ந்தாள். இருவரும் திண்ணையில் அமர்ந்த பின்னர் அனுமோகன் தீவிரமான குரலில் பேச ஆரம்பித்தான்.
“உன்னை எனக்குச் சின்னவயசுல பிடிக்காதுங்கிறதுக்காக இப்போவும் நான் உன்னை வெறுக்கணும்னு எதாவது கட்டாயம் இருக்குதா பவி? நீயே சொல்லிட்டியே, அது சின்ன வயசும்மா… எனக்கு எல்லாரும் என்னைப் பத்தி மட்டும் தான் பேசணும், என்னைப் புகழ்ந்து பேசணும்னு தோணும்… ஆனா அப்பா, பாட்டினு எல்லாரும் உன்னைப் பத்தியே பேசுறப்போ எனக்கு எரிச்சலா இருக்கும்… அதனால தான் எனக்கு உன்னைப் பிடிக்காம போச்சு… அப்புறம் நீயே என் கிட்ட பேசாம போயிட்ட… உன் சிஸ்டர் அண்ட் பிரதரும் அப்பிடி தான்… ஹானஸ்ட்லி, அன்னைக்கு ஈவினிங் நீ அம்மா கிட்ட பேசுனது, சண்முகம் அங்கிளை கிண்டல் பண்ணுனது, இது எல்லாத்துக்கும் மேல கன்னத்துல டிம்பிள் விழுற மாதிரி அழகா சிரிச்சதுனு எதையும் நான் கவனிக்காம விட்டிருந்தேனா கண்டிப்பா பவினு ஒருத்திய பத்தி நான் யோசிச்சிருக்கக் கூடமாட்டேன்…
பட் என்ன பண்ணுறது? நான் போன் பேச வந்தப்போ உதட்டுல சிரிப்பும் கண்ணுல குறும்புமா நீ பேசுன விதம் என் மனசுல பதிஞ்சு போயிடுச்சு… அப்போவே நீ இங்க வந்துட்ட” என்று சொல்லிவிட்டு தனது இடதுபக்க மார்பைச் சுட்டிக்காட்டினான் அவன்.
பல்லவிக்கோ இவை அனைத்தும் புதியதாக இருந்தது. அவளிடம் இவ்வாறெல்லாம் யாரும் பேசுவார்கள் என்று கூட அவள் கற்பனை செய்ததில்லை.
எனவே சற்று சிரமத்துடனே “ஆனா…” என்று அவள் இழுக்கவும் அனுமோகன் அவளது கரத்தைப் பற்றிக்கொண்டான். பற்றியதோடு அந்தக் கரத்தைத் தன் கன்னத்தோடு பதித்துக்கொள்ள அவனது கன்னத்தின் சொரசொரப்பான சருமம் உண்டாக்கிய குறுகுறுப்பு கரத்தைக் கூச வைத்தது.
கூடவே யாரும் பார்த்தால் என்னாவது என கண்கள் அலைபாயத் தொடங்கியது.
“டோண்ட் ரோல் யுவர் அய்ஸ் பேபி… ஐ வாண்ட் டூ கிளியர் ஆல் ஆப் யுவர் டவுட்ஸ்” என்று சொன்னவனின் குரல் குழைந்திருந்தது.
“சின்னவயசுல உன் கிட்ட ரெட் கலர் காட்டன் கவுன் ஒன்னு இருக்கும்… அது உனக்கு ரொம்ப பிடிச்ச கவுன்னு நினைக்கேன்… நீ அதை அடிக்கடி போட்டு நான் பாத்திருக்கேன்… அந்தக் கவுனை உனக்குப் பிடிக்கும்ங்கிறதுக்காக இப்போ உன்னால அதை போட முடியுமா என்ன?” என்று அவன் கேட்டு வைக்க பல்லவி புருவம் சுருக்கி முறைக்க ஆரம்பித்தாள்.
“என்ன பேசுறீங்க நீங்க?” என அவளது குரல் உயர
“லிசன்… நான் ஒன்னும் உன்னை அதை போடுனு சொல்லல… இப்போ நீயே நினைச்சாலும் சின்னவயசுல போட்ட கவுனை போட முடியாது… ஏன்னா நீ பெரிய பொண்ணா வளர்ந்துட்ட… அதே மாதிரி தான் எனக்கும் சின்ன வயசுல போட்ட சண்டையை இப்போவும் போடணும்னு அவசியமில்ல பவி… பிகாஸ் நானும் வளர்ந்துட்டேன்… அப்போ சண்டை போட்ட அதே அனுமோகன் நான் இல்ல… ஐ அம் மெச்சூர்ட் இனாப் நவ்… அங்கிளுக்கு அப்புறம் ஆன்ட்டிக்குத் துணையா இருந்து குடும்பத்தைப் பொறுப்பா பாத்துக்கிட்டது நீ தான்னு பாட்டி சொன்னாங்க… அவ்ளோ மெச்சூர்டான பொண்ணா எப்போவோ நான் பேசுனதை மனசுல வச்சுக்கிட்டு கல்யாணத்துக்கு யோசிக்கிற?” என்று ஆச்சரியத்துடன் வினவினான் அனுமோகன்.
பல்லவிக்கு அவனது பேச்சு சரி தானோ என்று ஒரு நிமிடம் தோன்றியது. அறியாவயதில் சிறுபிள்ளைத்தனமாகப் போட்ட சண்டைக்காக தான் ஏன் தனது தந்தையின் விருப்பம் என்று தெரிந்த பிறகும் அனுமோகனை மணக்க மறுக்கிறோம் என தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.
அப்போது தான் உமாதேவியின் உருவம் அவள் மனக்கண்ணில் உலா வந்தது. உடனே கரத்தை அவனிடமிருந்து உருவிக்கொண்டாள்.
“ஆனா உங்கம்மா… தேவி அத்தை… அவங்க எப்பிடி சம்மதிச்சாங்க? அவங்க ரொம்ப கௌரவம் பாக்குற ஆளாச்சே” என்றவளின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக அனுமோகனின் சிரமமும் அசைந்தது.
“அவங்க கௌரவம் பாக்குறவங்க தான்… ஆனா என்னோட விருப்பத்துக்கு எப்போவும் குறுக்க நிக்கமாட்டாங்க… அதோட உனக்கும் எனக்கும் மேரேஜ்னு பேசுன நேரத்துல என்னை சீனியர் ஆர்க்கிடெக்டா ஆபிஸ்ல புரொமோட் பண்ணீட்டாங்க… சோ அம்மாவோட கணக்குப்படி உன்னோட வருகை நல்ல சகுனமாம்… அதனால அவங்களுக்கு இந்தக் கல்யாணத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல… இவ்ளோ தானா? இன்னும் எதாவது டவுட் இருக்குதா?” என கேட்டுவிட்டு அவளை ஆராய்ச்சியாக நோக்கினான் அவன்.
பல்லவி அவன் சொன்ன அனைத்தையும் கேட்டு மனதிற்குள் அசை போட்டாள். தந்தையின் விருப்பம், தாயாரின் ஆசை இந்த இரண்டையும் யோசித்துவிட்டு “இல்ல! எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்” என்றாள் தெளிவாக.
அனுமோகனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும் அவளது கரங்களை பற்றிக்கொண்டவன் அவற்றைத் தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டுவிட்டு “தேங்க்யூ சோ மச் பவி” என்று சொல்லிவிட்டு கண்களில் எதிர்பார்ப்புடன் அவளை நோக்கினான்.
பல்லவிக்கோ திடீரென தீண்டிய ஆடவனின் ஸ்பரிசம் ஒருவித திடுக்கிடலோடு நாணத்தையும் தோற்றுவிக்க அவளால் முயன்ற முயற்சியாக மனதின் உணர்வுகளை மறைத்துப் புன்னகைத்தாள்.
அனுமோகனுக்கும் அதுவே இப்போதைக்குப் போதுமென தோன்றிவிட “ஓகே! பெரியவங்க கிட்ட சொல்லிடலாம்… வா” என்று உரிமையோடு அவளை எழுப்பிவிட்டு அவளுடன் தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் வந்தான்.
அங்கே இருந்த பெரியவர்கள் கோர்த்திருந்த கரங்களைப் பூரிப்புடன் பார்த்துவிட்டு முகம் மலர பார்த்திபன் மட்டும் “ஆனா அண்ணா உங்களுக்கு தான் எங்களை சின்னவயசுல இருந்தே பிடிக்காதே” என்று கேட்டுவிட்டு கேள்வியாய் நோக்கினான்.
அனுமோகன் அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு பதிலாக பல்லவியைப் பார்த்தவன் “ஊப்ஸ்! மறுபடியும் சிவப்பு கவுன் கதைய சொல்லணும் போலயே” என்று பொய்யாய் சலித்துக்கொள்ள அவன் சொன்ன விதத்தில் அவளின் இதழிலும் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.
அந்தச் சிரிப்பு உண்டாக்கிய துள்ளலோடு பார்த்திபனை பார்த்தவன் “லுக் பார்த்தி! நான் உனக்கு அண்ணா இல்ல… அக்காவோட ஹஸ்பெண்டை அத்தான்னு சொல்லுறது தானே வழக்கம்” என்றான் இலகுவாக.
பார்த்திபன் திகைத்து விழிக்கையிலேயே அவனருகில் அமர்ந்திருந்த பார்கவி “ஐயே! அத்தானா? அதெல்லாம் டூ ஓல்ட் ஃபேஷன்… நல்லாவே இல்ல… நாங்க உங்களை மாமானு தான் கூப்பிடுவோம்” என்றாள் வேகமாக.
“மாமா கூட நல்லா தான் இருக்கு… சோ அப்பிடியே கூப்பிடுங்க… அண்ணானு சொல்லி உறவுக்குள்ள கன்பியூசனை உண்டாக்கிடாதீங்க தெய்வங்களே!” என அவன் கேலி போல சொல்ல பெரியவர்களுடன் இளையவர்களின் முகங்களும் மலர்ந்தது.
பல்லவி திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் பெரியவர்கள் திருமண ஏற்பாட்டைப் பற்றி பேச ஆரம்பித்தனர். அவளும் அனுமோகனின் பேச்சு சாமர்த்தியத்திலும், குறும்பான சிரிப்பிலும் மனம் தொலைத்தவளாக அனைத்தையும் அமைதியாகக் கவனித்தாள். இருந்தாலும் அவளது மனதின் ஓரத்தில் எப்படி அனுமோகனும் உமாதேவியும் இந்தளவுக்கு மாறிப்போயினர் என்ற கேள்வி ஒட்டிக்கொண்டு தான் இருந்தது.
அனுமோகனோ அவளைச் சம்மதிக்க வைத்த சந்தோசத்தில் மிதந்தபடி தனது மைத்துனி மற்றும் மைத்துனனோடு எவ்வித கவலையுமின்றி உரையாட ஆரம்பித்தான்.
பல்லவியின் மனதின் ஒரு ஓரமாய் கிடந்த அந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுப்பதும், அது அப்படியே மக்கி மறைந்து போவதும் விதியின் கரங்களில் தானே இருக்கிறது!