📚 Table of Contents

Urugum Uyirin Maiyalai


Current Chapter

வலசை போற பறவைகள் தேன்மலையைத் தாண்டி கேரளாவுக்குப் போறதை நான் ஆச்சரியமா பாப்பேன். அந்தப் பறவைக்கூட்டம் வாழுற பகுதியில இருக்குற குளிர், உணவுப் பற்றாக்குறை காரணமா உயிர் பிழைக்குறதுக்காக இவ்ளோ தூரம் பறந்து வருதுங்கன்னு எங்கப்பா சொல்லுவார். எங்கேயோ இருந்து இங்க வந்து இந்தச் சூழல்ல கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு மறுபடி அதுங்களோட பகுதிக்கே திரும்பிப் போயிடுற அந்தப் பறவைகள் மூலமா வாழ்க்கை எதைத்தான் சொல்ல வருது?

-அம்முவின் டைரிக் குறிப்பிலிருந்து…

அக்டோபர் மாதத்தின் குளிர்ந்த இரவு நேரத்தில் வடகிழக்குப் பருவமழையைக் கரம் நீட்டி வரவேற்றுக்கொண்டிருந்தது தேன்மலை. தமிழக – கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் கானகமும், கேரளாவுக்குச் செல்வதற்கான நெளிநெளியான சாலைகளும், தேன்மலை ஜமீனுக்குச் சொந்தமான அரண்மனையும் இருக்கும் அழகான மலை வாழிடம் அது.

மழையோடு சேர்ந்து குளிரும் வாட்டியெடுக்கும் இரவில் தேன்மலைவாசிகளின் அத்தியாவசியத் தேவைகளான மளிகைப் பொருட்கள், ஸ்டேஷனரி, பழங்கள், காய்கறிகள், பால் என அனைத்தையும் தீர்த்துவைக்கும் அமிர்தம் சூப்பர் மார்க்கெட்டின் அருகே இருக்கும் கொடவுன் முன்னே நின்றுகொண்டிருந்தது சரக்கு இறக்கும் லாரி ஒன்று.

சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கான பொருட்களை அங்கே இறக்கிக்கொண்டிருந்தார்கள் இரண்டு பணியாளர்கள். மூன்றாவதாக ஒரு உருவமும் தன் முதுகில் சாக்கு ஒன்றைச் சுமந்துகொண்டு கொடவுனுக்குள் போனது.

“நாங்க பாத்துக்குறோம்னு சொன்னா கேளும்மா. பொம்பளைப் பிள்ளைங்க இவ்ளோ வெயிட் தூக்கக் கூடாது” என்றபடி மூட்டையை ஒரு ஓரமாக இறக்கினார் அந்தப் பணியாளர்களில் ஒருவரான லாரியின் ஓட்டுநர்.

“இதை விட ரெண்டு மடங்கு வெயிட்டையும்கூட என்னால சுமக்க முடியும்ண்ணே. பழகிப்போச்சு.”

பதிலளித்துவிட்டு மூட்டையை இறக்கிய உருவம் ஓர் இளம்பெண். இருபது வயதின் ஆரம்பத்தில் இருப்பவள். தமிழ்ப் பெண்களுக்கே உரித்தான அழகான டஸ்கி நிறம்! தேன்மலைக் காற்றின் உபயத்தால் மாசுமருவற்ற சருமம் அவளுக்குப் பெரிய வரமாய்! சராசரியான உயரமும் அதிகமாய்ச் சதை போடாத அதே சமயம் ஒல்லியும் இல்லாத உடல்வாகும் ஆண்கள் செய்யக்கூடிய பலமான வேலைகளைச் செய்ய அவளுக்கு ஏதுவாய்!

அணிந்திருந்த முரட்டு டெனிம் சட்டை தொளதொளவென இருந்தாலும் இந்த மாதிரி எடை தூக்கும் சமயங்களில் அதுவே அவளுக்குச் சௌகரியமாய் இருக்கும். அடர்ந்த கூந்தலை உயரமாய்த் தூக்கிக் கொண்டையிட்டிருந்தாள். மழையின் உபயத்தால் தொப்பலாக நனைந்திருந்த கூந்தலிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டவள் அம்ருதா. அமிர்தம் சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளினி.

அந்தக் கொடவுனின் உள்ளே இன்டஸ்ட்ரியல் டிஹியூமிடிஃபையரின் விளைவால் கதகதப்பு பரவியிருந்தது. எந்தத் தட்பவெப்பத்திலும் கொடவுனில் வைக்கப்படும் மளிகைச் சாமான்கள் அடங்கிய மூட்டைகள், பழங்கள், காய்கறிகளில் ஈரத்தால் பூஞ்சை வளர்ந்துவிடக் கூடாதெனச் செய்யப்பட்ட ஏற்பாடு.

ஒரு பக்கம் காய்கறிகளும் பழங்களும் பெரிய விரிப்புகளில் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருக்க, கமர்ஷியல் ஏர் ஃப்ளோயரின் வெக்கைக் காற்று அவற்றை வருடிக்கொண்டிருந்தது.

இன்டஸ்ட்ரியல் ஹியூமிடிஃபையரின் ஹம்மிங் சத்தத்தோடு மழையின் இரைச்சலும் காதுகளில் இசையாக ஒலிக்க, ஓரமாய்க் கிடந்த மேஜையிலிருந்து சரக்கு கொண்டுவந்த லாரியின் ஓட்டுநரிடம் கொடுக்கப் பணத்தை எடுத்தாள் அம்ருதா.

“டீ இருக்கு. குடிச்சிட்டுப் போறீங்களாண்ணே? செங்கோட்டை போறவரைக்கும் குளிர் தாங்கும்” என்று ஆதுரமாய்ப் பேசியபடி பணத்தை நீட்டினாள் ஓட்டுநரிடம்.

காய்கறி, பழங்களை மொத்தமாக விற்குமிடத்தில் சம்பளத்துக்குப் பணியாற்றும் ஆட்கள்தான் அவர்கள். ஆனாலும் மதிப்புக் குறைவாக ஒரு வார்த்தை, அலட்சியமாக ஒரு செய்கை அம்ருதாவிடமிருந்து வராது.

காரணம், அவளது தந்தையும் சிறிது சிறிதாக உழைத்து மளிகைக் கடை வைத்து அதைச் சூப்பர் மார்க்கெட்டாக விரிவாக்கியவர். நகரங்களில் இருப்பதைப் போலப் பல தளங்கள், அதிநவீன வசதிகள் எல்லாம் கிடையாது அந்தச் சூப்பர் மார்க்கெட்டில்.

ஒரே தளத்தில் நீளமாய் விரிந்திருக்கும் அமிர்தம் சூப்பர் மார்க்கெட் மெய்யாகவே தேன்மலைவாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதை இந்நிலைக்குக் கொண்டுவரவே அவளது தந்தை நடேசன் எத்துணை சிரமப்பட்டார் என அவள் அறிவாள்.

“எப்பவும் நமக்காக உழைக்குறவங்க மனசு வருத்தப்படுற மாதிரி பேசக் கூடாது பாப்பா. உன் அப்பாவும் ஒரு காலத்துல தொழிலாளியா இருந்தவன்தான். இதை நீ எப்பவும் மனசுல வெச்சுக்கணும்”

அந்த அறிவுரையை இப்போது கடைப்பிடிக்கிறாள். அந்த ஓட்டுநருக்கும் உடனிருந்த ஊழியருக்கும் தேநீரை ஊற்றிக் கொடுத்துவிட்டுத் தானும் அருந்தினாள்.

“கடையில வியாபாரம் எப்பிடி போகுதும்மா? எதுவும் பிரச்சனைன்னா சொல்லு. காளிமுத்து அண்ணே ஓடி வருவாவ. எல்லாம் நம்ம நடேசண்ணன் முகத்துக்காக ஆயிரம் பேரு உனக்கு உதவ வருவாங்க”

“நம்ம ஊராளுங்களைப்பத்தி தெரியாதாண்ணே? எல்லாம் சுமுகமாப் போகுது. கடனுக்கு வாங்குறவங்ககூட ஏமாத்தாம சரியான நாள்ல பணத்தைக் கொண்டுவந்து குடுத்துடுவாங்க.”

“சரிம்மா சரிம்மா! நைட் சாப்பிட்டாச்சா? நீ போய்தான் சமைக்கணுமா?”

“கனகு அத்தை சாப்பாடு குடுத்துவிட்டிருக்காங்கண்ணே”

“நம்ம லைப்ரரியன் வீட்டுக்காரம்மாவா?”

“ம்ம்! அவங்கதான்! எப்பவும் நைட் சாப்பாடு எனக்கும் பொம்முக்கும் அவங்கதான் குடுத்துவிடுவாங்க”

கனகு என்ற கனகவல்லி அம்ருதாவின் பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவரது கணவர் கஜேந்திரன் செங்கோட்டையில் ஷா மில்லில் பணியாற்றுவதோடு தேன்மலையில் இயங்கிவரும் சிறிய பகுதிநேர கிராமப்புற தனியார் நூலகத்தை நடத்தி வருகிறார். ஒரே மகள்தான். அவளையும் சென்னையில் திருமணம் செய்து கொடுத்தாயிற்று.

கனகவல்லிக்கும் அம்ருதாவின் அன்னை பூங்கோதைக்கும் இடையே பல்லாண்டு கால நட்பு. அந்த நட்புக்காகத்தான் நடேசனும், பூங்கோதையும் அவர்களின் மகன் மற்றும் மருமகளோடு விபத்தில் மறைந்தபோது தனியொருத்தியாய் நின்ற அம்ருதாவுக்கு அவளது அண்ணன் மகளான ஐந்து வயது பூர்விதாவை வளர்க்கத் துணையாய் நிற்கிறார் கனகவல்லி.

ஆறு மாதங்கள்! பெற்றோரையும் அண்ணனையும் தோழியாய் நடத்திய அண்ணியையும் இழந்து பத்தொன்பது வயதில் ஐந்து வயது பெண்குழந்தையின் பொறுப்பாளியாக அம்ருதாவை மாற்றிய அதே ஆறு மாதங்கள்! அவளுக்கு உறவாகவும் துணையாகவும் இருந்தவர்கள் அண்டை வீட்டார்களும் இந்தத் தேன்மலைவாசிகளும்தான்.

குடும்பத்தாரின் மரணத்தை எண்ணி சோகமும் அழுகையுமாக நாட்களைக் கழிக்க அம்ருதாவுக்கு அவகாசம் இல்லை. காரணம் அவளது அண்ணன் மகள்! அத்தையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அந்தச் சிறுகுழந்தைக்குத் தைரியம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் அம்ருதா. அந்தக் கடமையைச் சரியாகச் செய்துகொண்டும் இருக்கிறாள்.

பூர்விதா இப்போதுதான் ஒன்றாம் வகுப்பிற்குள் நுழைந்திருக்கிறாள். செங்கோட்டையில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றில் அவளைச் சேர்த்ததோடு தினசரி கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவதும் அம்ருதாவின் வேலைதான்.

தனக்கென இருக்கும் ஒரே ஒரு ரத்த உறவு பூர்விதா மட்டும்தான் என்பதால் அவளது பாதுகாப்பில் எக்காரணத்தைக் கொண்டும் அம்ருதாவால் ரிஸ்க் எடுக்க முடியாது.

மொத்தத்தில் இளம் வயதில் வயதுக்கு மீறிய பொறுப்புகளையும், உழைப்பையும் சுமந்துகொண்டிருக்கும் அன்பான தைரியமான பெண் அம்ருதா.

சரக்கு கொண்டுவந்த லாரி கிளம்பியது. சிறிது நேரம் உள்ளே வழக்கம்போலச் சோதனையிட்டுவிட்டுக் கொடவுனைப் பூட்டியவள் குடையை எடுத்துக்கொண்டாள். கையிலிருந்த டார்ச் வெளிச்சத்தை உமிழச் சில அடிகள் இடைவெளியில் இருந்த அமிர்தம் சூப்பர் மார்க்கெட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சூப்பர் மார்க்கெட் அமைந்திருக்குமிடத்திலிருந்து ஊருக்குள் சென்றால்தான் வீடு வரும். மெதுவாய் நடந்தால் பதினைந்து நிமிட தூரம். மழை இரவில் இப்படி நடந்து செல்வதே அவளுக்கு அலாதி இன்பமாய்!

அவள் நடந்துபோகும் உள்ளூர் சாலையிலிருந்து ஒரு பிரிவு பிரிந்து நெடுஞ்சாலையோடு இணையுமிடத்தில் ஒரு சின்ன மலைச்சரிவு உண்டு. அதன் கீழே சில அடிகள் வரை பள்ளம்தான். கேரளா செல்ல வேண்டிய வண்டிகள் அந்தச் சாலையில்தான் பயணிக்கும். இன்னொரு பக்கம் செல்லும் சாலையில் செங்கோட்டைக்குச் செல்ல வேண்டிய வண்டிகள் போகும்.

மெதுவாய் அந்த இடத்தைக் கடக்க எத்தனிக்கையில்தான் அம்ருதாவின் விழிகள் அங்கே இருந்த மரமொன்றில் மோதி நின்ற காரைக் கவனிக்க நேர்ந்தது. விளக்கு எரிந்து எரிந்து அணைந்ததிலிருந்து வெகு சமீபத்தில்தான் இந்த மோதல் நிகழ்ந்திருக்க வேண்டுமெனக் கண்டுகொண்டவளுக்குக் காருக்குள் யாருமிருந்தால் என்ற பிரம்மாண்ட கேள்வி மனதில்.

காரின் மறுபக்கக் கதவு திறந்திருக்கவும் மனதில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அங்கே சென்றவளுக்குக் காரின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து சரிந்திருந்த தலையொன்று பார்வைக்குக் கிடைத்தது.

பதறிப்போனவள் முன்னே சென்று பார்த்த அதே நேரத்தில் பளீரெனக் கண்ணைப் பறிக்கும் மின்னலொன்று வெட்ட, அந்த வெளிச்சத்தில் விபத்துக்குள்ளானவனின் வதனம் ரத்தத்தில் குளித்துத் தெரிந்தது.

நடுங்கிப்போனாள் அம்ருதா. ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடும் இரவில் இதேபோலக் கொடூரமான விபத்தொன்றில் முழு குடும்பத்தையும் இழந்த அந்த நொடி மனதுக்குள் சொல்லவொண்ணா வலியையும் நடுக்கத்தையும் உருவாக்கிவிடத் தன்னை மீறிக் கண்ணீர் பொங்கியது அவளுக்கு.

குடையைக் கீழே போட்டவள் அந்த இளைஞனுக்கு மூச்சு இருக்கிறதா எனக் கைவைத்துப் பார்த்தாள். அவனது மூச்சுக்காற்று பலவீனமாக வந்து விரலில் மோதியதும் அதிகம் யோசிக்கவில்லை.

அவனைத் தன்னோடு அணைத்துக் காரிலிருந்து வெளியே கொண்டுவந்தாள். அந்த வாலிபன் நல்ல உயரம்! ஆகிருதியான தோற்றமும்கூட. அவனது எடையை அவளால் சமாளிக்க முடியவில்லை. அவனும் முழு மயக்கத்திலிருந்தான்.

தோளை அணைத்து நடத்திக்கொண்டு போகக்கூட அவனது கால்களில் நடக்கும் வலு இருக்குமா என்பது சந்தேகமே! குழந்தையைத் தோளில் சாய்த்திருப்பதுபோல அவனைத் தனது தோளில் சாய்த்தபோதே அவனது பாரம் தாங்காமல் அம்ருதாவின் உடல் வளைந்தது.

தடுமாறியபடியே நின்றவள் சரியாக அங்கே டிவிஎஸ் 50 ஒன்று வரவும் அவசரமாகக் கையசைத்தாள்.

“அண்ணே! நான்தான் அம்மு”

வண்டி நின்றதும் அதிலிருந்து இறங்கினார் நடுத்தர வயதுத் தேன்மலைக்காரர் ஒருவர். காரையும் அவள் அணைத்து வந்திருந்த மனிதனையும் பார்த்ததுமே என்ன நடந்திருக்குமென ஊகித்துவிட்டார்.

“என்னல இது? தேவையில்லாத பிரச்சனைய இழுத்துக்கப் போறியா? நூத்தியெட்டுக்குக் கால் பண்ணுனா ஆம்புலன்ஸ் வரப்போகுது”

“இல்லண்ணே! பலமா அடிபட்டிருக்கு. நம்ம ஊரு ஆரம்ப சுகாதார நிலையத்துல இந்த மாதிரி ஆக்சிடென்ட்டுக்கு முதலுதவி பண்ணுவாங்க. ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் அங்க இருந்தா இவர் உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கு”

“ஆக்சிடென்ட் கேஸ்ல. நாளை பின்ன போலீஸ் அங்க இங்க நம்மளை அலைய விடுவாங்க”

“நீங்க வண்டிய மட்டும் குடுங்கண்ணே! நான் இவரைப் பின்னாடி வச்சு ஓட்டிட்டுப் போயிடுவேன்.”

“எம்மா ஆளு திடகாத்திரமா தெரியுது. விழுந்துட்டா என்ன செய்யுறது?”

“அந்தத் துண்டைக் குடுங்க. நான் பைக்ல ஏறுனதும் இவரை உக்கார மட்டும் வைங்க”

அம்ருதா டிவிஎஸ் 50-ல் அமர்ந்ததும் அவள் பின்னே அந்த வாலிபனைச் சிரமத்தோடு அமரவைத்தார். அவரது துண்டை வைத்துத் தன்னையும் அவனையும் பிணைத்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் அம்ருதா.

அப்போது அவன் வலியில் முனகிய சத்தம் அவளது செவியில் கேட்டது. இப்போதும் அவனது தாடை அவளது கழுத்து வளைவில் அழுத்த, மொத்த பாரமும் அவள்மீதுதான்.

கொட்டும் மழையில் பைக்கைக் கிளப்பிக்கொண்டு போனவளால் வேகமாகவும் ஓட்ட முடியாத சூழல். எங்கே அவன் தடுமாறிவிடுவானோ என்ற பயம். அதே நேரம் யாரென்றே தெரியாத அந்த இளைஞனைக் காப்பாற்றும் உத்வேகமும் அவளுக்குள் இருந்தது.

தேன்மலையில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும். அங்கே விபத்து, விஷக்கடிக்கான மருத்துவத்தோடு பிரசவம், தாய் – சேய் நலனுக்கான மருத்துவமும் பார்க்கப்படும். மழை வாழிடம் என்பதால் செங்கோட்டைக்குச் சென்று மருத்துவம் பார்ப்பதற்குள் ஏதேனும் அசம்பாவிதம் நேரலாம். எனவே அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இருபத்து நான்கு மணி நேரம் செயல்படும் விதமாய்த் தரம் உயர்த்தியிருந்தது.

அங்கே வந்து சேர்ந்ததும் வெளியே இருந்தபடியே குரல் கொடுத்தாள்.

“நர்ஸ் அக்கா! ஸ்ட்ரெச்சர் இருந்தா கொண்டு வாங்க”

தலைமைச் செவிலி அங்கே வந்தவர் படுகாயத்தோடு ஒருவனை அம்ருதா கொண்டுவந்திருப்பதைப் பார்த்ததும் உள்ளேயிருந்து ஸ்ட்ரெச்சரோடு வந்தார். கூடவே இரு வார்டு பாய்களும்.

அந்த இளைஞனை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து உள்ளே எடுத்துச் சென்றார்கள். வெளியே வந்த செவிலி விவரங்களைக் கேட்க ஆரம்பித்தார்.

“ஆக்சிடென்ட் போல. நான் போனப்ப கார் மரத்துல மோதி நின்னிட்டிருந்துச்சுக்கா. வேற எதுவும் எனக்குத் தெரியாது. இவரை நான் இதுக்கு முன்னாடி பாத்ததுகூட இல்ல”

“ஆக்சிடென்ட் மட்டுமில்ல, அந்த ஆளோட முதுகுல ஆழமாக் குத்தியிருக்காங்க. நிறைய ப்ளட் லாஸ். செங்கோட்டை ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோக ஆம்புலன்ஸை வரச் சொல்லுறோம். பல்ஸ் கொஞ்சம் நல்லா இருக்கு. செங்கோட்டை போறவரைக்கும் தாக்குப்பிடிப்பாரு.”

உள்ளே அந்த வாலிபனுக்கு முதலுதவியும் அவசரச் சிகிச்சையும் ஆரம்பமானது. அம்ருதா அப்படியே அங்கே நின்றுவிட்டாள். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தமும் கேட்டது.

அந்த வாலிபனை ஸ்ட்ரெச்சரோடு கொண்டுசென்றார்கள். அவனது கரம் தளர்ந்து ஸ்ட்ரெச்சரிலிருந்து தொங்க, பதறிப்போய் அதைப் பிடித்துக்கொண்டாள் அம்ருதா.

அவனை ஆம்புலன்ஸில் ஏற்றியதும் தானும் ஏறிக்கொண்டவள் நனையாத வண்ணம் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைலை எடுத்துக் கனகவல்லியின் எண்ணுக்கு அழைத்தாள்.

அவர் அழைப்பை ஏற்றதும் “அத்தை, இன்னைக்கு நைட் மட்டும் பொம்முவை உங்ககூடப் படுக்க வெச்சுக்கோங்க. நான் ஒரு அர்ஜென்ட் வேலையா செங்கோட்டை போறேனத்தை. நைட் வீட்டுக்கு வர முடியாது” என்று சொல்ல, மறுமுனையில் கனகவல்லி அவளைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை சொன்னார்.

அவரிடம் பேசியதும் பெரும் மனச்சுமை இறங்கியது அம்ருதாவுக்கு.

ஆம்புலன்ஸ் நகர நகர மயக்கத்தில் கிடந்தவனைப் பார்த்தாள் அவள். ரத்தக்கறையைச் சுத்தம் செய்து முதலுதவி பண்ணியிருந்தார்கள். உதிரக்கசிவு நின்றிருந்தது. ஆனாலும் லைஃப் சப்போர்ட்டிங் சிஸ்டத்தின் உதவியோடு படுத்திருந்தவனின் மார்பு ஏறியிறங்கியதே அவளுக்குப் பெரும் நிம்மதியாய்!

யாரென்றே அறியாத ஒருவனின் உயிரைக் காப்பாற்றக் கடவுளிடம் அத்துணை வேண்டுதல்களை வைத்துக்கொண்டவளைச் சுமந்துகொண்டு ஆம்புலன்ஸ் செங்கோட்டைக்கு விரைந்தது அந்த மலைப்பாதையில்!

One Month Plan – 30 Days (20 Novels)

Access for 30 days

Buy Now

Quick (3-Day) Plan (2 Novels)

Access for 3 days

Buy Now