📚 Table of Contents

Urugum Uyirin Maiyalai


Current Chapter

நியாய அநியாயங்கள் எல்லாம் ஒவ்வொருத்தரோட பார்வையைப் பொறுத்து மாறுபடும். எனக்கு நியாயம்னு தோணுற ஒரு விஷயம் இன்னொருத்தருக்கு அநியாயமா தோணலாம். அதனாலயே நியாயம் அநியாயம்ங்கிற கருப்புக்கும் வெள்ளைக்கும் நடுவுல இருக்குற க்ரே ஷேட் எனக்குச் சொந்தமானதா மாறிடுச்சு.

-ஆர்யனின் எண்ணத்துளிகள்…

“பேஷன்ட்டுக்குத் தலையில அடிபட்டிருக்கு. சி.டி. ஸ்கேன் பண்ணுனதுல உள்ள இன்டர்னல் ப்ளீடிங் எதுவுமில்ல. முதுகுல ஆழமா கத்திக்குத்து மாதிரி ஒரு காயம் இருக்கு. நல்லவேளையா தண்டுவடம் பாதிக்கப்படல. கை எலும்பு முறிஞ்சதுக்குச் சிகிச்சை பண்ணியாச்சு. குறைஞ்சது நாலு வாரத்துக்கு ஆர்ம் ஸ்லிங் போடணும். முதுகுல தையல் போட அனஸ்தீசியா குடுத்ததால அவர் நேத்து முழுக்க மயக்கத்துலயே இருந்தார். இன்னும் ஒரு மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும்.”

செவிலி படபடவெனச் சொல்ல அம்ருதா கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள். விபத்து எப்படி நடந்ததென விபத்துக்குள்ளானவன் விழித்துச் சொன்னால்தான் தெரியும். எப்படியும் காவல்துறை தலையீடு இருக்கும்.

பெருமூச்சுடன் இருந்தவள் அவனை உள்ளே சென்று பார்க்கலாமா என கேட்டாள் செவிலியிடம்.

“போங்கம்மா! ஆனா ஒருத்தர் மட்டும்தான். வேற யார் வந்தாலும் அலோ பண்ணக் கூடாது”

செவிலி கறாராகச் சொல்லிவிட்டுப் போக அவனை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்தாள் அம்ருதா.

மருத்துவமனைக் கட்டிலின் முனையைத் தாண்டி நீண்டிருந்த கால்களைக் குறுக்கி ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்திருந்தான். நோயாளிகளுக்கான உடை அவனை மூடியிருந்தது.

அம்ருதா அவனது முகம் இருக்கும் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள். இருளிலும் பதற்றத்திலும் அவனது முகத்தைக்கூட அவள் தெளிவாகப் பார்க்கவில்லை.

இப்போது நிதானமாக அவனைப் பார்த்தாள். வட இந்திய இளைஞனைப்போல பளீர் நிறம். கூரிய நாசியும் அடர்ந்த புருவங்களும் சிவந்த உதடுகளும் அவனுக்குத் தனி கம்பீரத்தைக் கொடுத்தன என்றால், தாடையில் முளைத்திருந்த ரோமக் கூட்டமும், த்ரீ டே ஸ்டபிளாக வளர்ந்த மீசையும் பிரத்தியேகமான ஆளுமையைக் கொடுத்தன.

நோயாளியாய்ப் படுத்திருக்கையிலேயே அவனை விட்டுப் பார்வையை விலக்குவது சவாலாக இருந்தது அம்ருதாவுக்கு. கைகளைக் குவித்துக் கன்னத்தைத் தாங்கி அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

மழை இரவில் தேன்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அவனைச் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்து இன்றோடு இருபத்து நான்கு மணி நேரம் முடிந்திருந்தது.

இன்னும் சில மணி நேரங்களில் அவனுக்கு மயக்கம் தெளியலாமென ஊகித்து வந்தவளுக்குச் செவிலியும் அதே பதிலைச் சொல்லிவிடவே, அவன் கண்விழிக்கும்வரை அங்கே இருக்க முடிவு செய்துவிட்டாள் அம்ருதா.

சூப்பர் மார்க்கெட்டை பக்கத்து வீட்டு சித்ராவின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்திருந்தாள். பூர்விதாவைப் பள்ளிக்கு அனுப்பியாயிற்று. இன்றைய தினம் வேறு வேலைகள் எதுவுமில்லை.

கண்களில் எதிர்பார்ப்போடு அவனையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தவள் அவனது உடலில் அசைவு தெரியவும் பரபரப்பானாள்.

கைவிரல்கள் அசைய, புருவங்கள் ஏறியிறங்க, கண்ணின் கருமணிகள் அங்குமிங்கும் உருள அனஸ்தீசியாவைத் தாண்டி அவனது உடல் போராடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

அதற்குள் மெல்ல மெல்ல இமைகளைப் பிரித்தான் அந்த வாலிபன். கண்களைத் திறப்பதற்கே கடும் போராட்டத்தை நடத்தியவனுக்குப் பார்வை மங்கலாகத் தெரிந்தது.

“உங்களுக்கு என்ன பண்ணுது? நர்ஸைக் கூப்பிடட்டுமா?”

நெடுநாட்களுக்குப் பிறகு அவனது செவியை நனைத்த தமிழ்மொழிகூட அவனது முதுகுப் பக்கத்திலிருந்து கிழிப்பதுபோல எடுத்த வலியைக் குறைக்க முடியவில்லை. கையில் ஏதோ பெரும் பாரம் ஒன்று அமர்ந்திருப்பதுபோல உணர்ந்தான்.

உடலைத் தூக்கி எழுந்து அமர்வதே பெரியதொரு சுமையைத் தூக்குவதுபோல இருக்கச் சிரமத்தினிடையே எழுந்திருக்கவும் முயன்றவனது இடது கரத்தைப் பற்றியது இன்னொரு தளிர்க்கரம்.

“மெதுவா! இடிச்சுக்காம எழுந்திருங்க. நான் கையைப் பிடிச்சுக்குறேன்” என்று இதமாய் இனிமையாய்க் கேட்ட குரலுக்குச் சொந்தக்காரிதான் சற்று முன்னர் நிழலுருவாய்த் தெரிந்தாளோ!

அந்த நொடியில் அவனது விழிகள் நன்றாகவே திறந்தன. தனது தோள்களைப் பற்றிச் சாய்வதற்கு ஏதுவாய்த் தலையணையை வைத்தபடி வெகு நெருக்கமாய் இருந்தவளை உணர்வுவிளங்கா பார்வையோடு ஆராய்ந்தான் அவன்.

“இப்பிடி உக்காருங்க” என்று அவனது முதுகு காயம் அழுந்திவிடாவண்ணம் அமர உதவியவளின் கண்பார்வையிலும் முகத்தில் தெரிந்த கவனத்திலும் கொஞ்சமும் நடிப்பில்லை. மனிதாபிமானத்தின் ரேகைகள் பரவிய முகம் அந்தப் பொழுதில் அவனுக்கு எல்லா மனிதர்களும் கேடுகெட்டவர்கள் இல்லை என்ற நம்பிக்கையைத் தருவதாய்!

“வலிக்கலல்ல?”

அக்கறையாய்க் கேட்டவளைக் கூரிய விழிகளால் ஏறிட்டான் அவன். தமிழ்ப் பெண்களுக்கே உரிய லட்சணமான முகம் ஆலிவ் நிறத்தில் எவ்வித ஒப்பனையுமில்லாமல் பளபளத்தது. கன்னக்கதுப்புகளில் மட்டும் எக்ஸ்ட்ரா பளபளப்பு. கூரிய நாசி, சதைப்பிடிப்பான உதடுகள், அடர்ந்த கூந்தலைப் பக்கவாட்டுப் பின்னலாகப் போட்டிருந்தாள்.

அணிந்திருந்த வெளிர் பச்சை நிற குர்தி அவளது சரும நிறத்துக்கு அத்துணை அழகாய் இருந்தது. அதிக உயரமும் இல்லாமல் ஆனால் அவனது உயரத்துக்கு ஓரடி குறைவாய்த் தெரிந்தாள்.

இத்துணை விவரங்களையும் கண்கள் பார்க்க, மூளை செயலாக்கம் செய்ய அம்ருதாவோ அவனது பார்வையிலேயே பேச மறந்துபோனாள்.

இதற்கிடையே மருத்துவரும் வந்துவிட்டார். மருத்துவரோடு சேர்ந்து காவல் ஆய்வாளர் ஒருவரும் அறைக்குள் நுழைந்தார். அம்ருதா அவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் விலகி நின்றுகொண்டாள்.

மருத்துவர் அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதை உறுதி செய்துவிட்டுப் பேச்சுக் கொடுத்தார்.

“உங்க பேரு என்ன தம்பி? அன்னைக்கு ராத்திரி எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?”

உடற்சோர்வும் வலியும் வாட்டி வதைக்கச் சோர்வாய்க் காணப்பட்டவன் ஒரு முறை அம்ருதாவைப் பார்த்தான். அவளுக்கு அவனது பார்வைக்கான அர்த்தமே புரியவில்லை.

பின்னர் நெற்றியைப் பிசைந்தபடி, “என் பேரு… ஆர்யன்.” என்றான் தெளிவான உச்சரிப்போடு.

அம்ருதா அவனது பெயரை மனதுக்குள் குறித்துவைத்துக்கொள்ள மருத்துவர் மேற்கொண்டு அவனது ஊர், வேலை என விசாரித்தார்.

“பேரு மட்டும்தான் ஞாபகம் இருக்கு. நான் எங்கிருந்து வந்தேன், என் குடும்பம் எதுனு… எவ்வளவு யோசிச்சாலும் தலையில ஒரு பாரம் அழுத்துதே தவிர எதுவும் ஞாபகம் வரல டாக்டர்…” என்று வலியை வெளிப்படுத்தினான் ஆர்யன்.

போலீஸ் அதிகாரி குறுக்கிட்டு, “பழசு ஞாபகம் இல்லைனா சரி. ஆனா உங்க முதுகுல ஆழமான காயம் இருக்கே? யாராவது கத்தியால குத்துனாங்களா?!” என்றார் சந்தேகமாக.

ஆர்யன் சற்றும் பதறாமல், தன் ஆழமான பார்வையால் அதிகாரியை நேருக்கு நேர் சந்தித்தான்.

“இல்ல சார். மழையில நான்தான் கார் கன்ட்ரோல் இழந்து மரத்துல மோதிட்டேன். அப்ப உடைஞ்ச காரோட இரும்புத் தகடு சீட்டைக் கிழிச்சுக்கிட்டு என் முதுகுல குத்திடுச்சு. என் மேலதான் தப்பு, இதுல நான் யாரைப் போய் கம்ப்ளைன்ட் பண்றது? இன்சூரன்ஸ் கிளைம் பண்ற நிலைமையிலயும் நான் இல்ல. தயவுசெஞ்சு கேஸ், போலீஸ்னு எதுவும் வேண்டாம்” எனத் தீர்க்கமாகச் சொன்னான்.

அவனுக்குத் தலையில் ஆரம்பித்துக் கால் வரை காயம் இருக்கிறது. உடற்சோர்வும், வலியும் ஆட்டிப் படைக்கிறது. அதைப் பார்க்கும்போதே அம்ருதாவுக்கு ஆயாசமாக இருந்தது. இவ்வளவு வேதனையினிலும் அவனது குரல் பிசிறு தட்டாமல் தெளிவாக ஒலிப்பதே அவளுக்கு ஆச்சரியமாய்! அந்தக் குரலில் ஒட்டியிருந்த கம்பீரத் தொனி மென்மையாக ஒலித்தபோதும் அதன் வீரியம் குறையவில்லை.

மருத்துவர் காவல்துறை அதிகாரியிடம் அவனது நிலைக்கான காரணத்தை விளக்க ஆரம்பித்தார்.

“இன்ஸ்பெக்டர், விபத்துல தலையில பலமா அடிபட்டதால இவருக்கு ஏற்பட்டிருக்கிற கன்கஷன் எஃபெக்ட் இது. இதுக்கு மருத்துவத்துல ரெட்ரோகிரேட் அம்னீஷியானு பேரு. அதனால இவருக்குத் தற்காலிகமா பழைய நினைவுகள் மறந்திருக்கு. முதுகுல உள்ள காயமும் ஆக்சிடென்ட்ல இரும்புத் தகடு குத்துன மாதிரிதான் இருக்கு. பேஷன்ட் நிலைமை இப்போதைக்கு ஸ்டேபிள்தான்” என்று மருத்துவக் காரணத்தை விளக்கினார்.

போலீஸ் அதிகாரி பெருமூச்சுடன், “சரி டாக்டர். ரெண்டு பேரும் ஆக்சிடென்ட்னு சொல்றதாலயும், அவரே புகார் இல்லனு சொல்றதாலயும், இத நான் சாதாரண விபத்தா ரெக்கார்ட் பண்ணி கேஸை முடிச்சுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, தன் கையில் வைத்திருந்த பையை ஆர்யனிடம் நீட்டினார்.

“உங்க கார்ல இருந்து எடுத்த பொருட்கள் இதெல்லாம். முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருக்குற ஒரு ஃபைல், உங்க மொபைல் போன், அப்புறம் உடைகள் இருக்குற ஒரு பேக். செக் பண்ணிக்கோங்க,” என்று சொல்ல அம்ருதா அந்தப் பையை வாங்கிக்கொண்டாள்.

காவல் ஆய்வாளர் கேள்வியாய் நோக்கியதும் “அவரோட கையில ஃப்ராக்சர். இன்னொரு கையில சிராய்ப்பு. வெயிட்டைத் தூக்க முடியாதுல்ல” என்றாள் அவள்.

அந்தச் சிறு செயலை மருத்துவரோடு சேர்ந்து ஆர்யனும் கவனித்தான்.

“இன்னும் எத்தனை நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்கணும் டாக்டர்?”

“மேக்ஸிமம் அஞ்சு நாள் இருந்தாகணும். காயத்துல இன்ஃபெக்‌ஷனுக்கான சான்ஸ் குறைஞ்சா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். அப்புறம் ட்ரெஸ்ஸிங் பண்ணுறதுக்கு வரணும்”

“சரி டாக்டர்”

“நீங்க என்கூட வாங்க இன்ஸ்பெக்டர்”

மருத்துவரும் காவல் ஆய்வாளரும் அங்கிருந்து சென்றதும் ஆர்யனிடம் வந்து நின்றாள் அம்ருதா.

“எல்லாம் மறந்துபோச்சுனு வருத்தமா இருக்குதா? கவலைப்படாதிங்க. ஆக்சிடென்ட் ஆன அதிர்ச்சியால வந்த மறதிதானே. உங்க உடம்பு சரியாகச் சரியாக ஒவ்வொண்ணா ஞாபகம் வந்துடும்”

அவள் பொறுமையாய் எடுத்துச் சொன்னபோதும் அவனிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. கண்கள் மட்டும் ஆணியடித்ததுபோல அவளிடமே நிலைத்திருந்தன.

அம்ருதாவுக்கு அந்தப் பார்வையே தன்னை ஆயிரம் துளைகள் இடுவதுபோல சங்கடமான உணர்வு.

“நான் அம்ருதா. அன்னைக்கு உங்களை ஆக்சிடென்ட் ஆன இடத்துல இருந்து நான்தான் எங்க ஊரு ப்ரைமரி ஹெல்த் சென்டருக்குத் தூக்கிட்டுப் போனேன்”

‘நீயா’ என்பதுபோல கேள்வியாய் நோக்கினான் அவன்.

“பைக்ல உக்கார வெச்சு அழைச்சிட்டுப் போனேன்.” என அவள் திருத்தவும்

“தேங்க்ஸ்” என்றான் மெதுவாய்.

“பரவால்லங்க! உங்க திங்ஸ்ல போன் இருக்குதானு தேடட்டுமா? யார்கிட்டவாச்சும் பேசணுமா?”

ஆர்யன் ஆமெனத் தலையசைக்க அவனது உடைமைகள் அடங்கிய பெரிய பையைச் சோதனையிட்டு மொபைலை எடுத்தாள் அம்ருதா. சமீபத்தில் சந்தையில் அறிமுகமான ஐபோன் மாடல் அது.

அதை அவனிடம் நீட்டும்போதே விபத்துக்குள்ளான காரும் பெரும் பணக்காரர்கள் உபயோகிப்பது என்பது நினைவுக்கு வந்தது அம்ருதாவுக்கு.

ஆர்யன் அவள் எதிர்பார்த்ததுபோல யாரிடமும் பேசவில்லை. அதில் சேமித்து வைத்திருந்த சில முக்கியமான எண்களை அவளிடம் காட்டினான்.

“இந்த நம்பர்ஸை மட்டும் தனியா சேவ் பண்ணி வைக்க முடியுமா?”

“கண்டிப்பா”

மடமடவெனத் தனது மொபைலில் இருக்கும் நோட்ஸில் அவன் காட்டிய மொபைல் எண்களைப் பெயர்களுடன் குறித்துக்கொண்டாள்.

ஆண், பெண் இரு பாலினப் பெயர்களும் இடம்பெற “உங்க ஃபேமிலியா?” என விசாரித்தாள் அவனிடம்.

மறுப்பாய்த் தலையசைத்தவன் “இல்ல! இவங்க எல்லாரும் என்னோட க்ளையண்ட்ஸ். நான்… நான் ஒரு டிரைவர்.” என்று அவன் சொல்லவும் அதிர்ச்சியாய் அவனை நோக்கினாள் அம்ருதா.

“உங்களுக்கு எதுவும் ஞாபகமில்லனு….”

ஆர்யன் விழிகளை இறுக மூடித் திறந்தான்.

“எனக்கு சில விஷயங்கள் மட்டும் ஞாபகம் வருது கொஞ்சம் கொஞ்சமா. நான் ஒரு டிரைவர். நான் ஓட்டிட்டு வந்த கார் யாரோடதுனு ஞாபகம் இல்ல. அது இப்ப…”

“போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு.” என்றாள் அம்ருதா.

“அது அங்கயே இருக்கட்டும்” என முணுமுணுத்தவன் தலைவலிக்கவும் நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.

அம்ருதா பதறிப்போய் அவனிடம் என்ன செய்கிறதென விசாரித்தாள்.

“தலை வலிக்குது”

நெற்றியை அழுத்தியவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

“நர்ஸைக் கூப்பிடட்டுமா?”

“இல்ல! நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்”

ஆர்யன் படுத்துக்கொள்ள ஏதுவாய்த் தலையணையை மாற்றி வைத்தவள் அவன் படுத்ததும் போர்வையை இடைவரை மூடிவிட்டாள். விழிகளை மூடியவனை ஆதுரமாய்ப் பார்த்தாள்.

“தூங்குங்க. எதுவா இருந்தாலும் அப்புறமா பாத்துக்கலாம்”

தனது கையில் தட்டிக்கொடுத்தவள் மனக்கண்ணால் பார்த்தவன் எதுவும் பேசவில்லை.

அடுத்து வந்த நான்கு நாட்களில் அவனுக்கு ஐ.வி ஏற்றினார்கள். மருந்து வைத்துக் கட்டுப்போட்டார்கள். காயத்தில் தொற்று உண்டாகிறதா எனப் பரிசோதித்தார்கள். இதற்கிடையே மறந்த நினைவுகள் எதுவும் திரும்ப வரவில்லை என்று சொல்லிவிட்டான் ஆர்யன்.

கூடவே அவனது உடைமையாய் இருந்த மொபைலை யாருமறியாவண்ணம் மருத்துவமனை அறைக்கு மறுபக்கம் இருக்கும் மருத்துவக் கழிவுகள் அடங்கிய குப்பைத் தொட்டியில் ஜன்னல் வழியாக வீசியும் விட்டான்.

ஐந்தாம் நாள் மாலையில் அவனை டிஸ்சார்ஜ் செய்தபோது அடுத்து என்ன என்பதே அவன் முன்னே இருக்கும் மாபெரும் கேள்வியாய்! அம்ருதா தயக்கத்தோடு அவனருகே வந்தாள்.

“நான் ஜீப்பை வரச் சொல்லட்டுமா? மலைக்கு மேல இப்ப போறதுக்கு டாக்சி எதுவும் வராது”

ஆர்யன் மௌனம் உடைத்தான். இந்த நான்கு நாட்களில் அவளைக் கண்களால் பரிசோதனை செய்வது, அவளது உடல்மொழியை ஆராய்வதில் பொழுதைக் கழித்தவன் இறுதியில் பேசியே விட்டான்.

“மலைக்கு மேல? அங்க எனக்குனு யாரும் இல்ல.”

“தெரியும்! அங்க எங்க வீடு இருக்கு. உங்களுக்கு பழைய ஞாபகம் வர்ற வரைக்கும் அங்க தங்கிக்கலாமே.”

ஆர்யனின் விழிகளில் ஐயம் படர்ந்தது. அம்ருதா அதைச் சடுதியில் கண்டுகொண்டாள்.

“என்னைச் சந்தேகப்படாதிங்க. எங்க வீட்டுல நானும் பொம்முவும் மட்டும்தான். உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன மாதிரியே ஒரு மலைச்சரிவுல ஆக்சிடென்ட் ஆனதால என் பேரண்ட்ஸ், அண்ணா, மதினி எல்லாரையும் இழந்துட்டு தனியாதான் வாழுறேன். பொம்மு என் அண்ணனோட பொண்ணு. அஞ்சு வயசுதான் ஆகுது. நீங்க ஆர்யன். ஒரு டிரைவர், இதைத் தவிர உங்களைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் உங்களை எங்க வீட்டுக்குக் கூப்பிட காரணம், இன்னும் உங்க காயம் ஆறல. கை எலும்பு இன்னும் கூடியிருக்காது. உங்களுக்கு யாரையும் ஞாபகமும் இல்ல. உங்க போனையும் மிஸ் பண்ணிட்டீங்க. என் நம்பர்ல இருந்து உங்க க்ளையண்ட்ஸுக்கு அழைச்சாலும் யாரும் கால்ஸ் எடுக்கல. இந்த நிலைமைல எப்பிடி உங்களைத் தனியா விட முடியும்? அன்னைக்கு மழையில உங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போக எனக்கு இருந்த ஒரே காரணம் மனிதாபிமானம். இப்பவும் அந்தக் காரணத்தை வெச்சுதான் கூப்பிடுறேன். நம்பி வாங்க! உங்களுக்கு ஞாபகம் எல்லாம் திரும்புற வரைக்கும் எங்க வீட்டுல இருக்கலாம். எங்க ஊர்க்காரங்களும் ரொம்ப நல்ல மாதிரி. எங்க ஊரை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”

ஆர்யனின் பார்வையில் அழுத்தம் கூடியது. ஆனாலும் அதில் நம்பிக்கையின்மையின் சதவிகிதம் அதிகம்தான். தனது உயிரைக் காத்தவள் என்பதால் அவள் சொன்னதை நம்பலாமென இறுதியில் தீர்மானித்தவன் சம்மதமாய்த் தலையாட்ட அடுத்த சில நிமிடங்களில் ஜீப் ஒன்று வந்தது.

மலைகளில் இருக்கும் சாலைகளில் பயணிக்க ஏதுவான வாகனம் அது. அதில் ஆர்யனின் உடைமைகள் அடங்கிய பெரிய பையை வைத்த அம்ருதா அவன் ஏறியமர உதவினாள். பின்னர் முன்னிருக்கையில் அவள் அமரவும் ஓட்டுநர் ஜீப்பைக் கிளப்பினார்.

மனதில் சில கணக்கீடுகளுடன் தேன்மலையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியிருந்தான் ஆர்யன்.