மயோனைஸ் பூசிய முகத்துடன் தனது மூக்கு கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைத்தபடி அவளை முறைத்துக் கொண்டு நின்றான் உதயசந்திரன்.
“இவன் கிளாஸுக்குத் தானே போனான்… இங்க எப்ப வந்தான்?”
தனக்குள் கேட்டுக் கொண்டவள் தவிப்புடன் நிற்கும் போதே “அச்சோ என்னாச்சு சந்துரு?” என்று பதற்றமாய் ஒரு குரல் கேட்க
“ஒன்னுமில்ல ஸ்வாதி… இந்தப் பொண்ணு கவனிக்காம இடிச்சிட்டா… அவ கையில இருந்த வெஜ் ரோல்ல மயோனைஸ் இருந்துச்சு போல… அது ஃபேஸ்ல பட்டுடுச்சு… நத்திங் சீரியஸ்” என்று கர்மசிரத்தையாக அக்குரலுக்குரியவளுக்குப் பதிலளித்தான் உதயசந்திரன்.
யாரவள் என்ற குறுகுறுப்புடன் திரும்பிப் பார்த்த ரோஹிணியைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். அவள் கழுத்தில் மாட்டியிருந்த ஐ.டி கார்டில் ‘எம்.ஸ்வாதி, எம்.காம் ஃபர்ஸ்ட் இயர்’ என்ற விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
அந்த ஸ்வாதி மெதுவாக அவளைக் கடந்து உதயசந்திரனிடம் சென்றவள் “வாஷ் பண்ணிக்க சந்துரு… இல்லனா பிசுபிசுனு இருக்கும்” என்று உலகமகா யோசனையைக் கூறிவிட்டு
“ஹலோ பாத்து வர மாட்டியா? உனக்குக் கண் முகத்துல இருக்குதா இல்ல பொடதியில இருக்குதா?” என்று ரோஹிணியிடம் எகிற ஆரம்பித்தாள்.
ரோஹிணிக்கும் சூடாக பதிலளிக்க விருப்பம் தான்! ஆனால் எதிரே நிற்பவன் உதயசந்திரனாக போய்விட்டானே! பல்லைக் கடித்தபடி நின்றவளுக்கு உதவியாக வந்து சேர்ந்தாள் மாலதி.
வந்தவள் நேரே ஸ்வாதியிடம் வாதிட ஆரம்பித்தாள்.
“அவளுக்குக் கண் எங்க வேணாலும் இருந்துட்டுப் போகட்டும்… நீங்க யாரு என் ஃப்ரெண்ட் கிட்ட வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறதுக்கு? இந்த மயோனைஸ் பூசுன மூஞ்சியே கம்முனு தானே நிக்குது… நீங்க பெருசா கேக்க வந்திட்டீங்க”
“ஏய் நீங்க யூ.ஜி ஸ்டூடண்ட்ஸ் தானே… எவ்ளோ திமிர் இருந்தா சீனியர் கிட்ட வம்பு இழுப்பீங்க? சந்துரு இதை இப்பிடியே விட்டா ஜூனியர்ஸ் நம்மளை மதிக்கவே மாட்டாங்க… வா! ஹெச்.ஓ.டி கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம்” என்று கூறிய அந்த ஸ்வாதி உதயசந்திரனின் கையைப் பற்றிய நொடி ரோஹிணிக்குள் புகைய ஆரம்பித்தது.
இவள் எப்படி என் கிரஷ்சின் கையைப் பற்றலாம்? கடுப்பு மேலிட அவளை முறைத்தவள்
“போய் கம்ப்ளைண்ட் பண்ணுங்க… நாங்களும் உங்க மேல கம்ப்ளைண்ட் குடுப்போம்” என்றாள்.
“எங்க மேல் என்னனு கம்ப்ளைண்ட் குடுப்ப நீ?” எகத்தாளமாக வினவியது ஸ்வாதியின் குரல்.
“அஸ் பெர் அவர் காலேஜ் ரூல்ஸ், பாய்சும் கேர்ள்சும் பேசிக்கவே கூடாது… ஆனா நீங்க சீனியர் கூட பேசுறது என்ன, எங்க கண் முன்னாடியே அவர் கைய பிடிக்கிறது என்ன… அப்ப யூ.ஜினா ஒரு ரூல், பி.ஜினா ஒரு ரூலா? இதுக்கு நீங்க ஆன்சர் பண்ண வேண்டாம்… நான் ஹெச்.ஓ.டி கிட்டவே கேட்டுக்கிறேன்”