காபியின் சுவைக்காக ஏங்கிய நாவுக்கு அணை போட்டபடியே “குட் மானிங் பாட்டி” என்றபடி கதவைத் திறந்தவள் அசோகமித்ரனை அவ்வளவு காலையிலேயே எதிர்பார்க்கவில்லை.
அவனோ அவளது ஷார்ட்சையும் டீசர்ட்டையும் பார்த்துவிட்டு ஒரு நொடி திகைத்துப் போனான். ஆனால் மஹிமாவுக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தோன்றவில்லை.
உடையணியும் முறையை ராஜநாராயணவிலாசத்திற்காக மாற்றிக்கொள்ள வேண்டாமென பரசுராமன் சொல்லிவிட ஸ்லீவ்லேஸ் டாப்களும், கணுக்கால் அளவு மேக்சிகளும் அணிந்து சுதந்திரமாகவே வலம் வந்தாள் மஹிமா.
அவனிடம் காலையிலேயே வாதிட்டு தனது சக்தியை இழக்க விரும்பாததால் அவனைக் கடந்து செல்ல முற்பட அசோகமித்ரன் அவசரமாக அவள் கையைப் பற்றி இழுத்து நிறுத்தினான்.
“இப்ப நீ எங்க போற?”
“பாட்டி கிட்ட காபி கேக்க போறேன்”
“இந்த டிரஸ்லயா?”
மேலிருந்து கீழாக தன்னை அளவிட்டவனின் பார்வையில் கடுப்புற்றவள்
“ஏன் இந்த டிரஸ்சுக்கு என்ன? நான் இதை தான் டெய்லி மானிங் போடுறேன்… தாத்தாவும் பாட்டியும் ஒன்னும் சொல்லலையே” என்றாள்.
அசோகமித்ரன் இடுப்பில் கையூன்றி முறைத்தவன் “அவங்களைப் பொறுத்த வரைக்கும் நீ இன்னும் குட்டி பாப்பா தான்… இப்ப தாத்தாவைப் பாக்குறதுக்கு ஊர்க்காரங்க வந்திருக்காங்க… அவங்க வீட்டுல ஆறு வயசு பாப்பா தான் இந்த ட்ரஸ்சை போடும்… உன்னை இப்பிடி பாத்துட்டு செத்துட கித்துட போறாங்க” என்றான்.
மஹிமா அசட்டையாய் தோளைக் குலுக்கினாள்.
“ஐ டோண்ட் கேர்”
சொல்லிவிட்டு ஹாலுக்குச் செல்லப் போனவளை மீண்டும் இழுத்து தனது கைவளையத்துக்குள் கொண்டு வந்தவன் குண்டு கட்டாக தூக்கி கொள்ள மஹிமா கடுங்கோபத்துடன் வசைமாரி பொழிய ஆரம்பித்தாள்.
“இடியட், காட்டுமிராண்டி, என்னை இறக்கிவிடு மேன்… இல்லைனா தாத்தாவைக் கூப்பிடுவேன்”
ஆனால் அவளது பேச்சை செவிமடுக்காது மீண்டும் அறைக்கே தூக்கி வந்த பிறகு தான் இறக்கி விட்டான் அசோகமித்ரன்.
மஹிமா சண்டைக்கோழியாய் சிலிர்க்கும் போதே “குளிச்சுட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு, ஐ மீன், உன் ஹைட்டுக்கு ஏத்த ட்ரஸ்சை சேஞ்ச் பண்ணிட்டு வா” என்றான் கட்டளையிடும் விதத்தில்.
“நீயெல்லாம் என்னய்யா பிசினஸ்மேன்? ஷார்ட் ட்ரஸ் போட்டா தப்புங்கிற ரீதியில பேசுற? நம்பர் ஒன் பத்தாம்பசலி” என்று வெடித்தவளிடம்
“நான் தப்புனு சொல்லவே இல்லையே… நீ மும்பைல இதை போட்டிருந்தா நான் உன்னை ஒன்னுமே சொல்லிருக்க மாட்டேன்… இன்ஃபேக்ட் ஃபர்ஸ்ட் டைம் உன்னை மும்பைல பாத்தப்ப அல்ட்ரா மாடர்னா தான் ட்ரஸ் பண்ணிருந்த…. அதை நான் ரசிக்கவும் செஞ்சேனே… ஆனா இது மும்பை இல்ல… இங்கிலீஸ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க ‘பீ அ ரோமன் இன் ரோம்’… சோ இடத்துக்கேத்த மாதிரி நடந்துக்க” என்று அமர்த்தலாக அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.