“வீடியோ ஷூட் பண்ணுறதுக்கு ரெடியா இருக்கியா?”
“ஐ அம் ரெடி”
அப்போது அவளை உற்றுக் கவனித்தான் இஷான்.
“உன் லிப்ஸ்டிக் ஷேட் மாறிருக்கோ?”
கண்களைச் சுருக்கி அவன் கேட்ட விதத்தில் சாத்விக்குள் பரபரப்பு இழையோடியது.
கண்கள் அந்தப் பரபரப்பின் அடையாளமாய் கருவிழிகளை வெண்படலத்துக்குள் மாரத்தான் ஓடவிட்டன.
ஏன் இப்படி பதற்றம் கொள்கிறாய்? தன்னைத் தானே கடிந்து கொண்டவளால் ஏனோ அந்தப் பதற்றத்தைத் தணிக்க முடியவில்லை.
“ஏய் சாத்வி, நீ வெக்கப்படுறியா என்ன? உன்னோட ஃபேஸ் ப்ளஷ் ஆகுது”
இப்படி குறுகுறுவென பார்த்தால் யார் தான் வெட்கம் கொள்ள மாட்டார்கள்?
எப்போதும் இஷான் செய்வது போல ஆட்காட்டி விரலை முகத்தின் குறுக்கே வைத்து பெருவிரலால் மோவாயைத் தாங்கி பாதிமுகத்தை மறைத்துக்கொண்டாள் சாத்வி.
அப்படியே முகத்தை மறைத்தபடி சமாளித்தாள்.
“நான் ஒன்னும் வெக்கப்படல… நம்ம டென்சன் ஆகுறப்ப அட்ரினலின் அதிகமா சுரக்கும்… அப்ப வேசோடிலேசன் நடந்து ப்ளட் வெஷல்ஸ் விரிவடையும்… அதனால ஃபேஸுக்கு வர்ற ப்ளட் ஃப்ளோ அதிகமாகும்… ஃபேஸ்ல இருக்குற வெய்ன்ஸ் அட்ரினலினுக்கு ரெஸ்பாண்ட் பண்ணுறதால விரிவடைஞ்சு அதிகமான இரத்தத்தை அலோ பண்ணுறதால முகம் சிவக்கும்”
இஷான் நமட்டுச்சிரிப்பை உதட்டுக்குள் பூட்டிக்கொண்டான்.
“இதை தான் ஷார்ட்டா நான் வெக்கப்படுறனு சொன்னேன்… உஃப்”
“அதுல்லாம் ஒன்னுமில்ல”
“அப்ப ஏன் பாதி முகத்தை மறைச்சு வச்சிருக்க?”
“நீ கூட தான் அடிக்கடி பாதி முகத்தை மறைச்சு போஸ் குடுப்ப… அப்ப நீ வெக்கப்படுறனு அர்த்தமா?”
“யாருக்கும் தெரியாம நான் எதையாச்சும் ரசிக்கிறப்ப பாதி முகத்தை மூடிப்பேன்… நீ என்னோட பாடி லாங்வேஜை இவ்ளோ க்ளோசா வாட்ச் பண்ணிருக்கனு இப்ப தானே தெரியுது”
தன் முன்னிலையில் இவன் அடிக்கடி அந்த போஸ் கொடுப்பதற்கு ரசனை தான் காரணமா?
சாத்வியின் மனம் கேள்வி கேட்கும் போதே பாதி முகத்தை மறைத்து விசமப்புன்னகையோடு இஷான் போஸ் கொடுக்க மீண்டும் அட்ரினலினின் சுரப்பு அதிகரித்து வேசோலிடேசன் நடந்தேறியது அவளுக்குள்.
அதே நேரம் வெப்பச்சலனத்திற்கு பதிலளிக்கும் விதமாக வானிலை மழைப்பெண்ணுக்கு வரவேற்பளிக்க அவளும் பன்னீராய் மழையைத் தூவியபடி வந்து சேர்ந்தாள்.
சடசடவென ஜதி போட்டபடி வெளியே மழை பெய்ய ஆரம்பித்த போது வேசோலிடேசனின் வீரியம் இறங்கி ஸ்கூட்டியின் நினைவு வந்தது சாத்விக்கு.
பெர்கோலாவுக்கு அடியே நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி நனைந்துவிடுமே!
“என் ஸ்கூட்டி நனைஞ்சிடும்”