“ஐயோ நான் ஒரு மண்டு… ஹனிமூன் கபிள் கிட்ட போய் கதை பேசிட்டிருக்கேன் பாருங்க… எல்லாத்தையும் பொறுமையா உங்க ஹனிமூன் முடிஞ்சதும் பேசிக்கலாம்… டாட்டா” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அந்தப் பேச்சிலேயே மாலை நேரம் வந்துவிட இருவரும் பேசியபடியே இரவுணவு தயார் செய்ய ஆரம்பித்தனர். மலைப்பகுதி என்பதால் சீக்கிரமே இருட்டி விட்டது. அந்த இரவின் அமைதியும் வெளியே சாரலாய் தூவிக் கொண்டிருந்த மழையும், தூரத்தில் கேட்ட அருவிகளின் இரைச்சலும் ரம்மியமான உணர்வை உண்டாக்கியது.
எப்போதும் வீட்டில் குடும்பத்தினர் சூழ இருந்தவர்களுக்குப் புதிதாக கிடைத்த இந்தத் தனிமையில் பகிர்ந்து கொள்ள ஏகப்பட்ட கதைகள் இருக்க அவற்றைப் பேசியபடியே சமைத்தும் முடித்தனர்.
அதன் பின்னர் வித்யாசாகரின் கைவளைவுக்குள் இருந்தபடியே அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்த அமிர்தவர்ஷினிக்கு அவனது அணைப்பிலிருந்து மீளும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. வித்யாசாகருக்கும் அவளை விலக்கி வைக்கும் எண்ணமில்லை.
மறுநாள் விடியலில் இருவரும் ஒன்றாய் அமர்ந்து காபி அருந்தும் போது அமிர்தவர்ஷினி மற்றும் வித்யாசாகர் இருவரின் மனமும் நிறைந்திருந்தது.
“எல்லா பிராப்ளமும் தீர்ந்து மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு சாகர்… எனக்கு இப்போ சத்தம் போட்டுக் கத்தணும் போல இருக்கு… அவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா?”
“ம்ம்… அம்மாவும் அத்தையும் பழையபடி மாறிட்டாங்க… நீயும் நல்ல பேத்தியா அருண் தாத்தாவுக்குச் செய்ய வேண்டிய கடமைல பாதிக்கிணறு தாண்டிட்ட… ஹரிக்கும் சம்முக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பேசிடலாம்.. மேகியும் ஆதியும் கூட செட் ஆன மாதிரி தான்… எனி ஹவ் வாழ்க்கை எவ்ளோ அழகானதுனு உன்னோட இருக்குற ஒவ்வொரு செகண்ட்லயும் என்னால ஃபீல் பண்ண முடியுது அம்மு”
“எல்லாம் ஓகே தான்… ஆனா நான் எக்சாம்ல பாஸ் பண்ணிடுவேனா சாகர்?”
திடீரென சந்தேகமாய் திரும்பி அவள் கேட்ட விதமும் பரிதவித்த விழிகளும் அவனை உருக்கிவிட அவளது நெற்றியில் முத்தமிட்டான் வித்யாசாகர்.
“நீ கண்டிப்பா பாஸ் ஆயிடுவ அம்மு… அப்பா அடிக்கடி சொல்லுற மாதிரி அவரோட ஆபிஸ்ல அமிர்தவர்ஷினி சி.ஏக்கு ஒரு சேர் காத்திட்டிருக்குடி… அதுல நீ உக்காரப் போற நாளை நான் செங்கோட்டைக்கு லோக்கல் ஹாலிடேவா அனவுன்ஸ் பண்ணலாமானு யோசிக்கிறேன்… நீ என்னடானா பாஸ் ஆவேனானு கேக்குற” என்று கேலியாகப் பேசியபடியே அவளுக்கு நம்பிக்கை கொடுத்தக் கணவனை தனது அகண்ட விழிகளால் நோக்கினாள் அமிர்தவர்ஷினி.
அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கை ஒன்றே அவளுக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்க அதே நம்பிக்கையுடன் “ஐ லவ் யூ சாகர்” என்று மென்மையாகச் சொல்லிவிட்டு அவன் மார்பில் சாய்ந்து தேனிலவின் அழகான தருணங்களை அனுபவிக்கத் தொடங்கினாள் அவள்.