அவனை அமருமாறு இருக்கையைக் காட்டியவளிடம் “அதிதி தேவோ பவனு அத்தை சொல்லி குடுத்திருக்காங்க போல” என சிலாகித்தான் அவன்.
பல்லவி மறுப்பாக தலையசைத்துவிட்டு “விரோதியா இருந்தாலும் வீட்டுக்கு வந்தா உபசரிக்கணும்னு சொல்லிக் குடுத்திருக்காங்க” என்றாள் சட்டென்று.
நீ ஒன்றும் விருந்தாளி இல்லை; விரோதி என சொல்லாமல் சொன்னவளை மெச்சுதலாகப் பார்த்தவன் “ம்ம்… இன்ட்ரெஸ்டிங்” என்று சொல்லிவிட்டுச் சாவகாசமாக வீட்டை ஆராய்ந்தான்.
நடுவே வானவெளியோடு நாற்பக்கமும் அறைகளைக் கொண்டு கேரளா பாணியில் கட்டப்பட்டிருந்த அந்த வீடு ஐந்து நபர்களுக்குப் போதுமானது தான் என்ற எண்ணத்துடன் பார்வையை வீடெங்கும் அலையவிட்டவனின் முன்னே டக்கென்ற சத்தத்துடன் வைக்கப்பட்டது காபி நிரம்பிய டபராசெட் ஒன்று.
நுரை பொங்க வீற்றிருந்த பில்டர் காபியின் நறுமணம் பிளாக் காபி பிரியனான அவனது நாசியை இனிமையாய் நிரட அதை விட மனமில்லாதவனாக எடுத்து அருந்த தொடங்கினான்.
பல்லவி அவன் டபராவைக் காலி செய்யும் வரை காத்திருந்தவள் “என்ன விசயம்?” என்று கேட்டுவிட்டு அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
“செண்பா அத்தை எங்க? நான் அவங்க கிட்ட தான் பேசணும் பவி”
“அம்மா மெஸ்கு போயிட்டாங்க… வீட்டுக்கு வர மூனு மணிக்கு மேல ஆகிடும்”
“பட் நான் அவங்க கிட்ட சீரியசா ஒரு விசயத்தைப் பேசணுமே”
அவனது சலித்தக்குரலில் அவள் புருவம் உயர்த்திப் பார்த்தாள். இந்தச் சாம்ராஜ்ஜிய இளவரசனுக்கு அவனது அன்னையின் கூற்றுப்படி சமையல்காரியான தனது அன்னையிடம் பேச என்ன இருக்கப் போகிறது!
மனதின் எண்ணத்தை முகம் பிரதிபலித்ததோ என்னவோ அனுமோகனும் அதற்கேற்றாற்போலே விடை பகர்ந்தான்.
“அத்தை கிட்ட பேச எனக்கு என்ன இருக்குனு தானே யோசிக்கிற… ஐ நோ… பட் யூ நோ வாட், ஒரு பொருள் நமக்கு வேணும்னா அதோட உரிமைக்காரங்க கிட்ட தானே பேசணும்” என்றான் அவன் பூடகமாக.
“எங்கம்மா கிட்ட இருக்குற எந்தப் பொருள் உங்களுக்கு வேணும்? ஐ அம் சாரி… தி கிரேட் அனுமோகனுக்குக் குடுக்கிற அளவுக்கு எங்கம்மா கிட்ட என்ன இருக்கு?”
“அது எதுவா வேணும்னாலும் இருக்கலாம்… அதை உன் கிட்ட என்னால டிஸ்கஸ் பண்ண முடியாது பவி”
“பவினு கூப்பிடாதீங்கனு நான் நேத்தே சொன்னேன்” என்றாள் அவள் குறிப்பு காட்டியபடி.
“சாரி… நீ சொல்லல… பவினு கூப்பிடாதிங்கனு வார்ன் பண்ணுன… யூ நோ ஒன்திங் ஆக்சுவலி ஐ ஹேட் வார்னிங்… சோ நான் பவினு கூப்பிடுறத கொஞ்சம் பொறுத்துக்கோ”
எவ்வளவு திமிர்! அன்றிலிருந்து இன்று வரை இவனிடம் திமிருக்குக் குறைவேது!
“அப்பிடி பொறுத்துக்கணும்னு எனக்குத் தலையெழுத்து இல்ல மிஸ்டர் அனுமோகன்” என்று பட்டென்று பதில் வந்தது அவளிடமிருந்து.
“தலையெழுத்தை தெரிஞ்சுக்கிற அளவுக்கு நீ சூப்பர் ஸ்மார்ட்னு தெரியாம போயிடுச்சே… தென் ப்ளீஸ் டெல் மீ… என் தலையெழுத்துல என்ன எழுதியிருக்கு?” என்று சீண்டினான் அனுமோகன்.
அவனது பேச்சு வஞ்சப்புகழ்ச்சியா அல்லது சீண்டலா என புரியாது இருதலைக்கொள்ளி எறும்பாக விழித்தாள் பல்லவி.
“லெட் மீ சே… என்னோட தலையெழுத்துல இந்த இலஞ்சியோட இளவரசி தான் என்னோட லைப் பார்ட்னர்னு எழுதிருக்குதாம்” என்று கேலி போல பேசினான் அவன்.
“டோன்ட் யூஸ் எனி அன்வாண்டட் மெட்டபர்… எதுக்கு வந்திருக்கீங்கனு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க… மூனாவது மனுசங்களை ரொம்ப நேரத்துக்கு வீட்டுலயே உக்கார வைக்கிற பழக்கம் எங்க குடும்பத்துல கிடையாது” என்று அவளிடமிருந்து சூடான பதில் வந்தது.