இவ்வளவு காலையில் அங்கே கலந்துரையாடல் நடைபெறுமாயின் அதற்கு காரணமானவன் ஒருவன் தான்! அவனைத் தானே அவள் தேடி வந்திருக்கிறாள்!
அந்த அறையின் கதவைத் தட்டியவள் கதவு திறக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் தானே உள்ளே சென்றுவிட்டாள். அந்த அறை இருளில் மூழ்கியிருக்க புரொஜெக்டரிலிருந்து வரும் ஒளி அங்கே இருக்கும் பெரிய திரையில் விழுந்திருக்க அதன் அருகில் வளர்ந்த ஒருவனின் வரிவடிவம் மட்டும் தெரிந்தது.
அவன் தான் அவள் தேடி வந்தவன்!
வேலைநேரத்தில் யாரும் இடையிட்டால் அவனுக்குப் பிடிக்காது. பிறந்தநாளும் அதுவுமாய் அவனைக் கோபமாய் பார்க்க விரும்பாதவள் விறுவிறுவென அந்த அறைக்குள் நுழைய இருட்டில் எதிலோ இடித்துக் கொண்டு கீழே விழப் போக அதற்குள் அவளைத் தாங்கின இரு கரங்கள்.
அதோடு அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன் “லைட் ஆன் பண்ணுங்க” என்று சொல்லவும் அறையின் விளக்குகள் ஒளிர்ந்தன.
தனது கரத்தில் சரிந்திருந்தவளை நேரே நிறுத்திவிட்டு மற்றவர்களிடம் “எல்லா விசயமும் நான் சொல்லி முடிச்சிட்டேன்… ஆல் ஆப் யூ மே கோ பேக் டூ யுவர் சீட்” என்று அழுத்தமாய் கட்டளையிட சில நிமிடங்களில் அந்த கான்பரன்ஸ் ஹால் காலியானது.
அனைவரும் சென்ற பிறகு அவளிடம் கோபத்தைக் காட்ட முயன்றவனாய் “வாட் இஸ் திஸ் பவா? முக்கியமான விசயம் பேசிட்டிருக்கிறப்ப ஏன் இண்டர்பியர் பண்ணுற?” என்று அழுத்தமாய் கேட்க
“நான் நேத்து கால் பண்ணுனப்போ கோயிலுக்கு வருவேனு சொல்லிட்டு இன்னைக்கு வராம ஏமாத்துனதுக்கு உங்களுக்குப் பனிஷ்மெண்ட் இது தான்!” என்று சொன்னவளின் பேச்சைக் கேட்டவன் தனது சிகையைக் கோதிக் கொண்டபடி நிற்க அவனை வைத்த கண் அகற்றாமல் நோக்கினாள் பவானி.
ஆழ்ந்த குரலில் “சிவா கோவமா? ப்ளீஸ்! என்னைப் பாருங்க” என்று சொன்னவளிடம் அவனாலும் கோபப்பட இயலாது போக அவள் புறம் திரும்பினான் அந்தச் சிவா என்று அழைக்கப்பட்ட சிவசங்கர். அவளை விட நான்கு வயது மூத்தவன்.