காரில் அமர்ந்தபடி பாடல் கேட்டுக் கொண்டிருந்தவன் திடீரென்று கார்கதவின் கண்ணாடியில் முகம் பார்த்தபடி நின்றிருந்தவளை நீண்டநாட்களுக்குப் பின்னர் கண்ட அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று புரியாது விழித்தான் அவன்.
அதே நேரம் ஷிவானியின் முகபாவனைகள் அவனை வேறு எதையும் சிந்திக்கவிட்டால் தானே!
ஆனால் எந்த விதமான மோன நிலைக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டல்லவா! அவனது இந்த மெய்மறந்த நிலையை அவனுக்கு உணர்த்தியது மியூசிக் சிஸ்டத்தில் அடுத்து வந்த பாடல். அதில் சுயநினைவுக்கு வந்தவன் காரின் கதவைத் திறக்கவும் அவளது கயல்விழிகள் விரிய அதைக் கவனித்தபடியே இருக்கையில் சாய்ந்தபடியே
“மூஞ்சூறு காத்து திருநெல்வேலி பக்கம் வீசிருக்கே! அத்தம்மாக்குத் தெரியாம திருட்டுத்தனம் எதுவும் பண்ணுறியா?” என்று கேட்டபடி புருவத்தை ஏற்றி இறக்கி கூரியவிழிகளால் அவளை ஏற்றிட்டபடி கேட்டவன் சாட்சாத் சக்திபிரகாஷ்.
ஷிவானி விழிகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் விரிய அவனைப் பார்த்து வாயைப் பிளந்தவள் இவன் ஜெர்மனியில் இருந்து எப்போது திரும்பினான் என்று திகைத்துப் போனாள். அதே சமயம் அவனது கடைசி வார்த்தையில் எரிச்சலுற்றாள். அதை வெளிப்படையாகக் காட்டியபடி கடுப்புடன்
“ஏன் நான் திருநெல்வேலிக்கு வந்தா திருட்டுத்தனம் பண்ண தான் வரணுமா? நான் என் ஃப்ரெண்டோட க்ரூப் ஸ்டடி பண்ண வந்தேன்” என்றாள் அமர்த்தலாக.
அவள் சொன்னது தான் தாமதம் சக்தி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். அவனது சிரிப்பு ஷிவானிக்கு எரிச்சல் மூட்ட சக்தி சிரித்தபடி இறங்கியவன் கார்க்கதவை காலால் சாத்திவிட்டு அதில் சாய்ந்து கொண்டான்.
அவன் எப்போதும் இப்படி தான்.
அவளை மட்டம் தட்டி கேலி செய்வது அவனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இது ஷிவானியின் யூகம். அதை நிரூபிப்பது போலவே சக்திபிரகாஷும் பதின்வயதில் படிப்பில் அவள் சராசரி என்பதால் கேலி செய்திருக்கிறான்.
அவன் வேலை கிடைத்துச் சென்னைக்குச் சென்றபோது ஷிவானி இருபத்தைந்து சதவீதம் மகிழ்ந்தாள் என்றால் படிக்கிறேன் என்று ஜெர்மனிக்குப் பறந்த போது மிச்சமுள்ள எழுபத்தைந்து சதவீத மகிழ்ச்சியையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டாள். விடுமுறைக்கு அவன் இந்தியா வரும் சமயங்களில் அவள் தூத்துக்குடியில் இருந்தால் தானே கேலிப்பேச்சுக்கு வழி வரும் என்ற யோசனையுடனே அவள் விடுமுறைக்காக கோயம்புத்தூருக்குச் சென்றுவிடுவாள்.
இத்தனை வருடம் சக்தியின் கேலியிலிருந்து தப்பித்தவளைக் காலம் கொக்கிரகுளம் சாலையில் அவன் முன் மாட்டிவைத்து வேடிக்கை பார்த்தது.
சக்தி அவளை மேலிருந்து கீழாகச் சுட்டிக்காட்டி “நீ திருநெல்வேலிக்கு க்ரூப் ஸ்ட்டி பண்ண வந்தேனு சொன்ன பாரு.. ஜோக் ஆஃப் த இயர்… உனக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லைனு எனக்கு நல்லாவே தெரியும்டி… உண்மையச் சொல்லு எவனாச்சும் பாய் ஃப்ரெண்டை பார்க்க வந்தியா?” என்று கேட்டுவிட்டு நக்கலாய்ச் சிரித்தவனுக்கு ஷிவானி நறநறவென்று பற்களைக் கடித்த சத்தம் செவிக்குள் தேன்மாரி பொழியச் செய்தது.
“நான் எதுக்கு வந்தா உனக்கு என்னடா? அப்பிடியே நான் என் பாய் ஃப்ரெண்டை பார்க்க வந்தாலும் அதை உன் கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல… தேவை இல்லாம என் விசயத்துல தலையிடாத சக்தி” என்று எரிச்சலுடன் மொழிந்தவள் அந்தச் சாலையில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த ரேணுகாவைக் கவனிக்கவில்லை.
ஷிவானி புசுபுசுவென்று மூச்சு விட்டபடி பேசிக் கொண்டிருக்கும் போது சக்தி அவளுக்குப் பதிலளிக்க வாயெடுக்கையில் ஷிவானியிடம் ஓடி வந்த ரேணுகா மூச்சிரைத்தபடி அவளது தோளைப் பற்றிய பிறகு தான் ஷிவானிக்கு அவள் வந்ததே தெரியும்.
அவளைக் கண்டதும் எங்கே எதையும் உளறிவிடுவாளோ என்ற பயம் ஷிவானியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய அதைச் சக்தி கண்டுகொண்டான். காருக்குள் குனிந்தவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து ரேணுகாவுக்கு நீட்ட அவள் நன்றியுடன் அவனைப் பார்த்தபடி தண்ணீரைக் குடித்தாள்.
பின்னர் ஷிவானியிடம் “டிராயிங் ப்ரஷ்ஷை வச்சிட்டு வந்துட்ட ஷிவா… அதான் அவசரமா ஓடி வந்தேன்” என்று சொன்னது தான் தாமதம் சக்தியின் விழிகள் பளிச்சிட ஷிவானியின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததை போல மாறிவிட்டிருந்தது.
ஷிவானியைப் பார்த்து மீண்டும் புருவத்தை ஏற்றி இறக்கியபடி இப்போது என்ன சொல்லப்போகிறாய் என்று மௌனமாய் வினவ அவளோ ரேணுகாவிடம் இருந்து ப்ரஷ்ஷை வாங்கிவிட்டு அவளை அனுப்பிவைத்தாள்.
இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாதவளாய் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்துவைத்தவளின் சமாளிப்பில் அவனுக்குச் சிரிப்பு வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
“சோ அத்தம்மா சொன்ன பேச்சை கேக்காம இன்னும் பெயிண்ட் ப்ரஷ்ஷுனு சுத்துற? பொய் சொல்லிட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்து படம் வரையற அளவுக்கு அதுல அப்பிடி என்ன இருக்கு?” என்று நக்கலாய் கேட்டான் சக்தி.
ரூ.50 செலுத்தில் தளத்தில் இருக்கும் 20 நாவல்களை ஒரு மாதத்துக்குப் படிக்கலாம்.
ரூ.20 செலுத்தி மூன்று நாட்களுக்கு இரண்டு கதைகளைப் படிக்கலாம்.
ரூ.100 செலுத்தி ஒரு மாதத்துக்குத் தளத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளையும் படிக்கலாம்.