அவளது சுருள் கூந்தலை ஒரு இழை பிரியாமல் பிசிறின்றி மடித்தவன் அவள் வைத்திருந்த கிளிப்பை மாட்டியபடியே “இந்த நூடுல்ஸ் ஹேரை எப்பிடி மேனேஜ் பண்ணுற?” என்றபடி கேப்பையும் மாட்டிவிட,
கிருஷ்ணஜாட்சிக்கு அவன் இலகுவாகப் பேசிய அதிர்ச்சி வேறு வாயை அடைத்துவிட,
தொண்டையைச் செருமிக் கொண்டவள், “அம்மாஞ்சி நான் ஒர்க்கை கண்டினியூ பண்ணணும்” என்க,
அவன் கேலியாக “நான் உன்னோட கையை ஒன்னும் கட்டிப் போடலையே” என்றுச் சொல்லிவிட்டு குறும்புடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அவள் அவனது செய்கைக்கு அர்த்தம் புரியாமல் விழித்துவிட்டுத் தோளை குலுக்கியவள் எப்போதும் போல வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். ஆனால் அவளிடம் பேசிவிட்டு அவனது அலுவலக அறைக்குச் சென்ற ஹர்சவர்தனோ புன்னகையுடன் தன் கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னவென்று தெரியாத மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவன் அதே மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்ல, அங்கே அவனது அன்னை அவன் தலையில் இடியைத் தூக்கிப் போட்டார்.
அவன் வீட்டுக்குச் செல்லும் போது விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும் வந்திருக்க வீடே கலகலப்பாக இருந்தது.
அவனைக் கண்டதும் விஜயலெட்சுமி, “இதோ மாப்பிள்ளையாண்டானே வந்துட்டான்” என்றுச் சொல்ல,
ஹர்சவர்தனும் புன்னகையுடன், “வாங்க மாமி! வாங்க மாமா. எப்பிடி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்துவிட்டு தனது அறைக்குச் செல்ல முயன்றவனைத் தடுத்து நிறுத்தியது அன்னையின் குரல்.
“ஹர்சா! அண்ணாவும், மன்னியும் நோக்கும் வர்ஷாவுக்கு விவாகம் பேசத் தான் வந்திருக்காடா கண்ணா” என்க,
ஹர்சவர்தனுக்கு இந்த பேச்சு முன்னரே தெரிந்தது தான் என்றாலும் இன்று அதைக் கேட்ட போது அவனுக்கு மனம் ஒப்பவில்லை.
அவனது முகச் சுருக்கம் யார் கண்ணில் பட்டதோ இல்லையோ விஜயலெட்சுமியின் கண்ணில் தெளிவாகப் பட்டது.
இதற்கு மேல் இவனை யோசிக்க விட்டால் அது தனக்கு பாதகமாக முடியும் என்பதால் அவசரமாக, “அது அவா குழந்தையா இருக்கறச்சவே பேசி முடிச்சது தானடி பத்மா. அவன் என்னைக்கு உன் பேச்சைத் தட்டியிருக்கான் சொல்லு” என்று ஹர்சவர்தனின் பலகீனமான அம்மா செண்டிமெண்டில் குத்திவிட அவன் அதற்கு மேல் பேச முடியாத ஊமையானான்.
வலுக்கட்டாயமாகப் பேச்சுவார்த்தை அனைத்தும் முடியும் வரை புன்னகைத்தவன் அனைவரும் கலையவே அறைக்குச் செல்ல எத்தனிக்கையில் பத்மாவதி, “ஹர்சா நேக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கறது தெரியுமோ? உன் விவாகம் என்னோட இருபத்தாறு வருச கனவுடா. நோக்கும் வர்ஷாக்கும் கல்யாணமாகப் போற நாளுக்காக நான் எவ்ளோ ஆவலா காத்திண்டிருக்கேன் தெரியுமோ? என் ராஜா” என்றபடி அவனுக்கு முகம் வழித்து திருஷ்டி கழித்தார்.
அவனும் அன்னையின் கனவுக்கு முன் தன்னுடைய மன உணர்வுகள் ஒன்றுமில்லை என்று ஒதுக்கியவன், அனைத்துக்கும் பூரணச் சம்மதம் என்றுச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தன்னைச் சிறை வைத்துக் கொண்டான்.
அதே நேரம் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையை நீரஜாட்சி கிருஷ்ணஜாட்சிக்கு போனில் சொல்லிவிட, அவள் உடனே வர்ஷாவுக்குப் போன் செய்து வாழ்த்து தெரிவித்தாள்.
“நீ எப்போ நம்மாத்துக்கு வருவேனு நானும் நீருவும் காத்திருக்கோம் தெரியுமா? சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு வந்துடு வர்ஷா! அப்புறம் நீ, நான், நீரு மூணு பேரும் ஜாலியா அரட்டை அடிக்கலாம், பேசிக்கலாம், ஊர் கூட சுத்தலாம்” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல, வர்ஷாவும் அந்தத் திருமண விஷயத்தில் உற்சாகமாகவே இருந்தாள்.
இவ்வாறு இருக்க அந்த வருட தீபாவளிக்கு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், ரகுநந்தனும் தன் பயிற்சிக்காலம் முடிந்து இந்தியா வருவதாகத் தெரிவித்துவிட, பத்மாவதி வீட்டை அல்லோகலப்படுத்தி விட்டார்.