“உனக்கு என்னோட ஃபீலிங்ஸ் புரியாது மிஸ்டர் சித்தார்த்… ஏன்னா உனக்கு அப்பா அம்மா அண்ணானு எல்லாரும் இருக்காங்க… ஆனா எனக்கும் தனுவுக்கும் வேற யாரும் இல்ல… அவளுக்கு நான், எனக்கு அவ…. அம்மா அப்பாவை இழந்தவங்களுக்கு மத்த சொந்தங்கள் இருந்தும் இல்லாத மாதிரி தான்… இன்னைக்கு வரைக்கும் அடுத்தவங்க நிழல்ல வாழுற நிலமை உனக்கு வரல… வந்தா எங்களோட கஷ்டம் உனக்குப் புரியும்” என்று வலியுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லத் தொடங்கினாள்.
சித்தார்த்துக்கு அவள் சொன்ன வார்த்தைகளின் வலியை உணர்ந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் இப்படி சொல்லிவிட்டாளே என அவளை அவளது போக்கில் விடவும் அவன் தயாராக இல்லை.
வேகமாக நடந்து செல்பவளின் பின்னே ஓடியவன் பாதையை மறிப்பது போல நிற்க ஷான்வி அவனை வழிவிடுமாறு சைகை காட்டினாள். அவன் நகரவில்லை.
“வழிய விடு மிஸ்டர்… ஐ ஹேவ் டு கோ” என்று பல்லைக் கடித்தவளை முடியாது என்பது போல பார்த்தவன் இன்னும் வழியை விட்டு நகரவில்லை.
அவள் இடவலமாக மாறி மாறிச் செல்ல முயன்றும் முடியாது போகவே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சித்தார்த் விட்டால் இவள் தன்னை பைத்தியக்காரன் ஆக்கிவிடுவாள் போல என சிந்தித்தவாறு மீண்டும் அவள் முன்னே சென்று நிற்கவும்
“ஏன் வழி மறிக்கிற? என்னைப் போக விடு ப்ளீஸ்… நான் கிளாராவோட ஸ்டே பண்ணிப்பேன்” என்று முகம் சுருக்கிக் கூறியவளை நோக்கி முப்பத்திரண்டு பற்கள் மின்ன புன்னகைத்தான் அவன்.
“இப்போ ஏன் சிரிக்கிற நீ?” – ஷான்வி.
“சாரி ஷானு… என்னை மன்னிச்சிடு” என்று சொன்னவனை இப்போது எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.
அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சித்தார்த் அவளருகில் வந்தவன் சட்டென்று அவளைத் தூக்கிக் கொள்ள இதை எதிர்பாராத ஷான்வி முதலில் திகைத்தாள்.
அவன் அவளைத் தூக்கிக்கொண்டு சில அடிகள் நடக்கத் தொடங்கிய பிறகு உணர்வுபெற்றவளாய் அவனை அடிக்கத் தொடங்கினாள்.
“ஏய் என்னடா பண்ணுற நீ? ஒழுங்கா என்னை இறக்கிவிடு… இல்லனா நான் சத்தம் போட்டு இங்க இருக்கிற எல்லாரையும் எழுப்பி விட்டுருவேன்”
“உன்னால எவ்ளோ கத்த முடியுமோ அவ்ளோ கத்து ஆங்ரி பேர்ட்… ஆனா உன்னை தனியா எங்கயும் போக விடறதா இல்ல”
தீர்மானமாய் உரைத்தவன் அவளைக் காரினுள் அமர வைத்துவிட்டுக் கதவை பூட்டினான்.
பின்னர் பொறுமையாகச் சென்று அவளது ரோலர் சூட்கேசைக் காருக்கு உருட்டி வந்தவன் அதை பின்னிருக்கையில் போட்டுவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
ஷான்வி காரின் கதவைத் திறக்க எவ்வளவோ முயல அது திறக்காமல் அடம் பிடித்தது.
“நீ சமத்தா உக்காந்தா கார் இப்போ ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூக்குப் போகும்… இல்ல இப்பிடி குட்டிக்கலாட்டா பண்ணிட்டே தான் வருவேன்னு பிடிவாதம் பிடிச்சேனா கார் பேலர் அவென்யூக்குப் போகும்”
“பேலர் அவென்யூல என்ன இருக்கு?”
“எங்க அப்பார்ட்மெண்ட் இருக்கு… இப்போ சொல்லுங்க மேடம் கார் எங்க போனா உங்களுக்கு வசதியா இருக்கும்?” என்று குறும்பாய் கேட்டபடி சிரித்தவனின் கழுத்தை நெறிப்பது போல கைகளைக் கொண்டு சென்றவள் அவன் கண் சிமிட்டவும் சட்டென்று கைகளைக் கீழே போட்டுவிட்டு நேரே திரும்பி சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.